வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி – 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் – 3 டம்ளர்
நெய் – கால் கப்
பெரிய வெங்காயம் – 2
முந்திரிப் பருப்பு – 20
கிராம்பு – 6
லவங்கப்பட்டை – 6
ஏலக்காய – 6
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பெரிய தேங்காய – 1/2 மூடி
உப்பு – 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
பச்சை மிளகாய் – 2
செய்முறை :
* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அரிசியை கழுவி வைக்கவும்.
* எலும்ச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடித்து கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, காய்கறிகள், பொடித்த கிராம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது கழுவி வைத்த அரிசி, எலுமிச்சை சாறு, உப்பு போடவும்.
* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.
* அரிசி நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.