இன்று நடைப்பயிற்சி செய்யாதவர்களை பார்ப்பது கடினம். சர்க்கரை நோய், இருதய நோய் என்று பல நோய்கள் மனிதனை தாக்க, வீட்டுக்குள் சுகவாசியாக இருந்த மனிதன் உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டான். இதையடுத்து தற்போது காலையில் நடைப்பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆனாலும் சிலர் சோம்பேறித்தனம் காரணமாகவும், நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டும், பெண்களில் சிலர் வெட்கப்பட்டுக் கொண்டும் பயிற்சியை மேற்கொள்வதில்லை. இவர்களுக்காகவே வீட்டுக்குள் செலவில்லாமல் செய்யக்கூடிய நடைப்பயிற்சி ஒன்று உள்ளது. இதை அனைவரும் செய்யலாம்.
உங்கள் வீட்டில் ஒரு படிக்கட்டு மட்டும் இருந்தால் போதும். இந்தப் பயிற்சியை தினமும் செய்யலாம். படிக் கட்டின் கீழ் பகுதியில் உள்ள முதல் படியின் முன் நின்று கொள்ள வேண்டும். இரு கால்களையும் நின்ற நிலையில் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வலது காலை தூக்கி முதல் படியில் வைக்க வேண்டும். அதன் பிறகு இடது காலையும் தூக்கி முதல் படியில் வைக்க வேண்டும். பின் மீண்டும் வலது காலை எடுத்து முன்பு இருந்ததைப் போல் கீழே கொண்டு செல்ல வேண்டும். அடுத்ததாக இடது காலையும் அது போலவே செய்யவேண்டும்.
பிறகு மீண்டும் வலது காலை முதலில் சொன்னது போலவே செய்யவேண்டும். இப்படி வலது காலை முன்னிலைப்படுத்தி 20 முறை செய்யவேண்டும். அதன் பிறகு இடது காலை முன்னிலைப் படுத்தி 20 முறை பயிற்சி செய்ய வேண்டும். அதாவது முதல் படியில் மட்டும் கால்களை ஏற்றி இறக்க வேண்டும்.
இந்த பயிற்சியின் போது கைகளை அசைத்துக் கொள்ளலாம். இந்த பயிற்சியை உங்கள் தேவைக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம். காலில் வலி ஏற்பட்டால் மட்டும் நிறுத்திவிட வேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் இந்தப் பயிற்சியை செய்யலாம்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரான இயக்கத்தைப் பெறும். உடலில் வியர்வை அதிகமாக உண்டாகும். நடைப்பயிற்சி செய்தால் எந்த அளவு பலன் கிடைக்குமோ அந்த அளவு இந்தப் பயிற்சியிலும் கிடைக்கும்.
இதிலே மற்றொரு பயிற்சியும் உண்டு. இந்த பயிற்சியின் போது படிக்கட்டின் முதல் படியில் பின்னோக்கி நின்று கொள்ள வேண்டும். வலது காலை பின்புறமாக எடுத்து முதல் படியில் வைக்க வேண்டும். பிறகு இடது காலையும் எடுத்து படியின் மேல் வைக்க வேண்டும். அதன்பிறகு வலது காலை கீழே இறக்கி இடது காலையும் கீழே இறக்க வேண்டும்.
இதில் வலது காலை முன்னிலைப் படுத்தி 10 முறையும் இடது காலை முன்னிலைப் படுத்தி 10 முறையும் இந்தப் பயிற்சியை செய்யலாம். தேவைக்கேற்ப இந்தப் பயிற்சியை தினமும் 2 முதல் 3 எண்ணிக்கை வரை கூட்டிக்கொள்ளலாம். இதை செய்யும் போது உடல் அதிகமாக வியர்க்கும்.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்வது நல்லது. மற்றபடி சர்க்கரை நோயாளிகள் உள்பட அனைவரும் இந்த பயிற்சியை செய்யலாம்.