பெற்றோர் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் எந்த முறையில் கண்டிக்கலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்
பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள் இவையணைத்தும் சரிதானா? குழந்தைகளை இப்படியெல்லாம் கண்டித்து வளர்ப்பது அவசியம்தானா? என்ற கேள்வி மனதில் எழலாம்.
குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரிமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல.
இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை. அதனால் அவைகளை குழந்தைகள் அதிகமாக செல்கின்றன. இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை.
உதாரணமாக அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதனால் பல்லுக்கு உண்டாகும் கெடுதல் என்ன என்று குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு குழந்தை தானாகவே சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளும் மாறாக பெற்றோர்கள் அடித்துத் திருத்த நினைத்தால் சாக்லேட் மீது ஆசை அதிகமாகி குழந்தை ஏராளமான சாக்லேட்டுகளை உண்க ஆரம்பித்துவிடும். சில வேளைகளில் பெற்றோர்களுக்கு தெரியாமல் உண்கவும் செய்யும். பொய் பெசுவதும் மறைப்பதும், திருட்டுத்தனமும் இவ்வாறுதான் தொடங்குகிறது.
பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.