சைவம்

பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) – இரண்டரை கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி – கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) – தலா அரை கப்

துவரம் பருப்பு – அரை கப்

மைசூர் பருப்பு- 6 டீஸ்பூன்

புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணை – 6 டேபிள் ஸ்பூன்

நெய் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம் – 1 துண்டு

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 4 டீஸ்பூன்

தனியா – 6 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10 முதல் 15

மிளகு – 2 டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் – அரை கப்

தாளிக்க

கடுகு – 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

நிலக்கடலை – 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரையுங்கள். பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து, வடிகட்டுங்கள்.

புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்பட்டால் சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை. மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.

நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்றும் சொல்வதுண்டு.

இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.ezu kai 2692196f

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button