குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க மிகவும் சத்தானது கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க். இதை எப்படி செய்து என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க்
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய கேழ்வரகு – 250 கிராம்
முளைகட்டிய கம்பு – 250 கிராம்
தேங்காய் பால் – 1 கப்
சுக்குத்தூள் – கால் டீஸ்பூன்
ஏலப்பொடி – அரை டீஸ்பூன்
கரும்பு வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி பாகு – 200 கிராம்
ஆப்பிள் – 1
மஞ்சள் வாழைப்பழம் – 1
கருப்பு திராட்சை – 10
மாதுளை முத்து – 5 டீஸ்பூன்
பப்பாளிப்பழம் – 4 துண்டு
கொய்யாப்பழம் – 1
மாம்பழம் – 1
செய்முறை :
* பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முளைகட்டிய கேழ்வரகையும் முளைகட்டிய கம்பையும் நன்கு கழுவி அதை மிக்சியில் நன்றாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். பால் நன்றாக கொதித்து சுண்டி கெட்டியாக, கஞ்சி பதம் வந்ததும் ஏலப்பொடி, சுக்குத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
* அடுத்து அதில் கரும்பு வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி பாகு விட்டு நன்றாக கலக்கவும்.
* கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் பழங்களைப் போட்டு கலந்து பரிமாறவும்
* சுவையான சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க் ரெடி!
குறிப்பு:
* குழந்தைகளுக்கு சத்துமாவு கொடுப்போமே… அதைவிட அதிக சத்து இந்த கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் பாலுக்கு இருக்கிறது.
* முளை கட்டிய கம்பு, முளை கட்டிய கேழ்வரகு இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு பசும்பாலில் கலந்து கொடுத்தாலும் நல்லது.