"குடி, குடியை கெடுக்கும்", "குடிப்பழக்கம் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு" என சுவர்களில் வாசகமாக எழுதினாலும், காதுக்குள் மைக் வைத்து உயிர் போக கத்தினாலும் கூட இங்கு பெரும்பாலானோர் கேட்பதாய் இல்லை. பெண்கள் சாலையில் இறங்கி மதுவிலக்கிற்கு போராட்டம் நடத்தினாலும் கூட, மதுக்கடையை தேடி ஓடும் அதே வீட்டு ஆண்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
விட்டொழிக்க வேண்டாம் என்ற போதிலும், குறைத்துக் கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறோம். இருபது வயதில் இருக்கும் சுறுசுறுப்பு முப்பது வயதில் இருப்பதில்லை, முப்பது வயதில் இருக்கும் ஆரோக்கியம் நாற்பதில் இருப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் ஐம்பது வயதை எட்டுவதற்கு முன்னரே பலர் விண்ணை எட்டிவிடுகின்றனர் என்பது தான் சோகம்.
இதற்கு நீங்கள் இருபது வயதில் குடிக்கும் குடியும் ஓர் காரணம் என்பது நீங்களே அறிந்தது தான், அன்பான "குடி"மக்களே. குறைந்தபட்சம் முப்பது வயதிற்கு மேலாவது குடிப்பழக்கத்தை நீங்கள் குறைத்துக் கொண்டால், பத்தில் இருந்து பதினைந்து வருடம் வரை கொஞ்சம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்…..
இல்லறம் நல்லறமாக இருக்க இல்லறத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், இல்லற வாழ்க்கையே பிரச்சனை என்றால் யாரிடம் போய் பேச முடியும். இந்த விஷயத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நீங்கள் கண்டிப்பாக முப்பது வயதிற்கு மேல் மது அருந்துவதை நிறுத்தியாக வேண்டும்.
சேமிப்பு கண்டிப்பாக உங்களுக்கு முப்பது வயது என்னும் போது, உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு போக ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய செலவு இரட்டிப்பாக மாறும் நிலை இது. இந்த வேளையிலும் நீங்கள் மது அருந்திக்கொண்டு காசை விரையம் செய்துக்கொண்டிருப்பது அவ்வளவு நன்றாக இருக்காது. மற்றும் குடும்பத்தில் தேவையற்ற நிறைய சண்டைகள் வர இது காரணமாகிவிடும்.
சிறப்பான முறையில் செயல்பட உங்கள் வேலைகளிலும், தொழிலிலும் சிறப்பான முறையில் செயல்பட, நீங்கள் மது அருந்தும் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். முப்பது வயதிற்கு மேலும், நீங்கள் வேலையில் சிறந்து செயல்படாமல் இருந்தால், வயதான காலத்தில் நிறைய கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டிய கட்டாயங்கள் ஏற்படும்.
நம்பிக்கை உங்களது தன்னம்பிக்கை மட்டுமின்றி, உங்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் வளர, நீங்கள் முப்பது வயதிற்கு மேல் குடியை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல் சமூகத்தில் உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.
கொழுப்பை குறைக்க கல்லை கரைக்கும் இளமை வயதை நீங்கள் இப்போது கடந்துவிட்டீர்கள். உடல் இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த வயதில் தொப்பை அதிகரித்தால், குடும்ப சூழலுக்கு மத்தியில் குறைப்பது கடினம். எனவே, நீங்கள் கட்டாயமாக மதுவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நோயற்ற வாழ்விற்கு முப்பது வயதை கடந்தும் நீங்கள் தொடர்ந்து அதிகம் குடிப்பது, நிறைய உடல்நல குறைபாடுகள் ஏற்பட முதன்மை காரணமாக இருக்கிறது. முக்கியமாக, கல்லீரல் பகுதியை வெகுவாக பாதிக்கிறது.
உறக்கம் ஓர் மனிதனுக்கு முக்கியமானது மதுப்பழக்கம் உங்கள் உறக்கத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது. உறக்கமின்மை, மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும். இந்த மன அழுத்தம் எல்லா உடல்நல கோளாறுகளுக்கும் அழைப்பிதழ் வைத்து வரவழைக்கும். இதெல்லாம் உங்களுக்கு தேவையா? ஆதலால், குடியை தயவு செய்து, முப்பது வயதிற்கு மேல் குறைத்துக்கொள்ளுங்கள்.
மனநலம் சீராக இருக்க தீராத குடிப்பழக்கம் உங்களது உடல்நலத்தை விட அதிகமாய் மனநலத்தை தான் பாதிக்கிறது. இது, உங்கள் அன்றாட வாழ்க்கையை வலுவாக பாதிக்கும்.