நடுத்தர வயதினரும் என்றும் இளமையோடு இருப்பதற்கு சருமத்தை எந்த முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
முதுமையிலும் மினுமினுக்கும் இளமைக்கு
முதுமையில் வர வேண்டிய சரும சுருக்கம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடுகிறது. பலர் பார்ப்பதற்கு இளமையாக இருப்பார்கள். ஆனால் சருமம் முதிர்வு தன்மையுடன் காணப்படும். தோல் சுருக்கம் அவருடைய வயதை அதிகப்படுத்தி காண்பித்துவிடும். சருமத்தில் வறட்சி ஏற்படுவதுதான் அதற்கு காரணம். சருமத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருப்பதே இளமை தோற்றத்தை தக்க வைக்கும். நடுத்தர வயதினரும் இளமையோடு இருப்பதற்கு சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.
* அடிக்கடி முகம் கழுவிக்கொண்டே இருப்பது சரும வறட்சிக்கு வழிவகுக்கும். வெளியே செல்லும்போது, வீடு திரும்பும்போது என தினமும் மூன்று, நான்கு முறை முகம் கழுவினால் போதுமானது. அடிக்கடி முகம் கழுவினால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை நீங்கி விரைவாக சுருக்கங்கள் வந்துவிடும். முகம் கழுவும்போது சருமத்திற்கு பொருத்தமான வீரியமற்ற குளியல் சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* நிறைய பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதோடு விரைவிலேயே முதுமையை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து முகத்திற்கு மஞ்சள் பூசுவது சுருக்கங்களை தடுக்க உதவும். ஆனால் அளவோடு பயன்படுத்துங்கள்.
* மாதுளம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் கே, பி, சி ஆகியவை இருக்கின்றன. அதனை சாப்பிடுவதாலும், சருமத்தில் பூசுவதாலும் அழகு மேம்படும்.
* சரும அலர்ஜி பிரச்சினைகளுக்கும் மாதுளம் பழம் சிறந்த தீர்வு தரும். மாதுளம் பழத்தை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவி வந்தால் சருமம் பொலிவு பெறும்.
* மாதுளம் பழ விதைகளுடன் தயிரை சேர்த்து முகத்தில் பூசி வந்தாலும் சருமம் பளிச்சிடும். சுருக்கம் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படும்.
* மாதுளை பழத்துடன் தேன் கலந்தும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். மாதுளை விதைகளை நன்கு அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவி வந்தால் சருமம் மின்னும்.
* ஒருபோதும் மேக்கப்பை கலைக்காமல் இரவில் தூங்கிவிடக்கூடாது. அதிக களைப்பினால் சோர்வாக இருக்கும்போது மேக்கப்போடு தூங்கிவிட்டால் சரும பாதிப்பு அதிகமாகிவிடும். அதிக மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.