* உணவுப்பழக்கம்
உங்கள் கூந்தலின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தைக் கணித்துவிட முடியும். சரிவிகித சத்தான சாப்பாடு என்பது ஆரோக்கியமான கூந்தலாக பிரதிபலிக்கும். கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான புரோட்டீன், வைட்டமின் ஏ, பி மற்றும் சி, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை அதிகமுள்ள உணவுகளாகத் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். புரதம் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், முட்டை, சீஸ், ட்ரை ஃப்ரூட்ஸ், பால் போன்றவற்றில் உள்ளது.
புரதக் குறைபாடு இருந்தால் கூந்தலின் நிறமும் மங்கும்.மீன், ஈரல், பச்சை மிளகாய், முள்ளங்கி, பூசணிக்காய், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் ஏவும், பருப்பு வகைகள், ஈஸ்ட், பால், ஆரஞ்சு, எலுமிச்சை, ராஸ்பெர்ரி, கொய்யா போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் சியும் உள்ளன. முழு தானியங்கள், பசலைக்கீரை, வாழைப்பழம், முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. தானியங்கள், ஆப்பிள், கோதுமைப் பொருட்களில் துத்தநாகம் உள்ளது.
* உடற்பயிற்சி
உடற்பயிற்சி உடலுக்குத்தான் என்றில்லை. மிதமான உடற்பயிற்சிகளும் ஆசனங்களும் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தலையும் காக்கக்கூடியவை. அளவான உடற்பயிற்சியின் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கூந்தலுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் சரியாகச் சென்றடைய உதவும். நடை, நீச்சல், சைக்கிளிங் என உங்கள் உடற்பயிற்சி எதுவாகவும் இருக்கலாம்.
* தூக்கம்
போதுமான தூக்கத்தின் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகிறது. உடலின் உள் உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன. தூக்கமின்மை என்பது இந்த எல்லா செயல்களையும் பாதித்து, கூந்தல் உதிர்வுக்கும் காரணமாகும்.
* வாழ்க்கை முறை
பரபர என்ற வாழ்க்கை முறை, எப்போதும் பணத்துக்குப் பின்னால் ஓட்டம், எந்நேரமும் வேலையைப் பற்றிய சிந்தனை, ஓய்வே இல்லாத உழைப்பு போன்றவை கண்டிப்பாக உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியவை. உடல்நலம் பாதிக்கப்படும்போது கூந்தல் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்கிற அளவுக்கு மட்டுமே வேலை பாருங்கள். சக்திக்கு மீறிய வேலைகளை ஏற்க வேண்டாம். அது உங்கள் உடலுக்கும் கூந்தலுக்கும் நல்லதல்ல.
* பாசிட்டிவ் மனசு
வாழ்க்கையில் பாசிட்டிவான அணுகுமுறை இருந்தால் எதையும் அடையலாம். அதில் அழகான, ஆரோக்கியமான கூந்தலும் அடக்கம்! ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமானால் மனது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து இயல்பாக ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கூந்தல் பிரச்னைகளேகூட ஒருசிலருக்கு தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்க வைக்கும். எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும் என நம்புங்கள்.