ஃபேஷன்

மெஹந்தி

ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி, சாதாரண பெண்கள் முதல் நாகரிக விரும்பிகள் வரை, பாட்டி முதல் பேத்தி வரை எல்லோருக்கும் பிடித்தது மருதாணி. காலங்கள் மாறினாலும், நாகரிகம் என்னதான் முன்னேறினாலும் மருதாணி இட்டுக் கொள்கிற மனதை மட்டும் இன்னும் தொலைக்கவில்லை பெண்கள். மரத்தில் இருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்த இலைகளை அம்மியில இட்டு அரைத்து, கைகளுக்கும் கால்களுக்கும் வைத்துக் கொண்டு, அது எப்படி சிவக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் காத்திருப்பது சுகமான அனுபவம்!

மருதாணி மோகம் மேலும் அதிகரித்திருப்பதன் விளைவே, சென்னையின் பல பிரதான பகுதிகளின் நடைபாதைகளிலும் மால் வாசல்களிலும் கடை விரித்திருக்கிற மெஹந்திவாலாக்கள். இது போக, சூப்பர் மார்க்கெட் முதல் பெட்டிக்கடை வரை எங்கும் கிடைக்கிற ரெடிமேட் மெஹந்தி கோன்களும் இந்தக் காலத்துப் பெண்களின் மருதாணி வேட்கைக்குத் தீர்வாக இருக்கின்றன.

மருதாணி என்பது இயற்கையானது. ஆனால், ரெடிமேட் கோன்கள் உபயோகிப்பதிலும், அனுபவமில்லாத, ஏமாற்றுவித்தை காட்டுகிற மெஹந்திவாலாக்களிடம் போட்டுக் கொள்வதிலும் நிறைய ஆரோக்கியக் கேடுகளும் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. மருதாணியின் மகத்துவம் பற்றியும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் பேசுகிறார் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன்.

மருதாணி எனப்படும் ‘மெஹந்தி’ இன்று உலகம் முழுவதும் பிரபலம். மெஹந்தி ஐயாயிரம் வருடங்கள்
பழமையானது. எகிப்திய ‘மம்மிகளுக்கு’ மெஹந்தி பூசி நகங்களுக்கும் தலைமுடிக்கும் அழகுபடுத்தும் பழக்கம் இருந்ததாம். மெஹந்தி இந்தியாவுக்கு 12ம் நூற்றாண்டில் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாட்டிகள் காலத்தில் கைகளுக்கு தொப்பியிட்டு, உள்ளங்கைகளில் பருப்பு களில் பெயரெழுதி, மருதாணியால் கை முழுக்க மெழுகிய காலங்கள் மலையேறி விட்டது. மருதாணியின் அறிவியல் பெயர் ‘லாசோனியா இன்னர்மிஸ்’. மருதாணி சிறிய புதர்ச்செடி போல நெருக்கமாக வளரும். இதன் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், முதிர் இலைகள் அடர் பச்சையாகவும் காணப்படும். இதன் இலைகள் கசப்புச்சுவை உடையவை.

இருவகை மெஹந்திகள் பழக்கத்தில் உள்ளன. ‘ஹென்னா’ (பெரிய இலை மருதாணி) குறைந்த நிறமாய் மாறும். அதிக வாசனையில்லாதது. ‘ரஜனி’ (சிறிய இலை மருதாணி) அதிக ஆழமான சிவப்பை கொடுக்கும் அதிக வாசனை உள்ளது.
தலையில் ‘டை’ அடிப்பதால் சாதாரண சரும அலர்ஜி முதல் புற்றுநோய் வரை வருவதாகக் கேள்விப்படுகிறோம். ‘டை’யை தவிர்க்க நினைப்பவர்களுக்கு 100 சதவிகித பாதுகாப்பைத் தருவது ஹென்னா.

மருதாணி பூசி கூந்தலுக்கு சாயமேற்றுவது உடலுக்கு உகந்தது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருமண பந்தத்தில் முதன் முதலில் ஈடுபடுவோர் உடல் குளிர்ச்சியாக இருந்தால் நல்லது என்பதால் உடல் சூட்டை தணிக்க ‘மருதாணி’ பயன்படுத்தலாம் என பாட்டி வைத்தியம் சொல்வதுண்டு. அதன் தொடர்ச்சிதான் இன்று எல்லா இனத்தவர் மத்தியிலும் பிரபலமாக நடைபெறுகிற திருமணத்துக்கு முந்தைய மெஹந்தி செரிமனி.

மருதாணியின் மருத்துவக் குணங்கள்…

* கால் பித்த வெடிப்புக்கு ஏதேதோ மருந்தை பூசுவதற்கு பதில் வாரம் இருமுறை மருதாணி பூசினால் பித்த வெடிப்பு, உடலின் பித்த சூடு அனைத்தும் போய்விடும்.
* மருதாணியில் ஹென்னா டோனிக் அமிலமும், நிறமூட்டக்கூடிய காரணிகளும் அடங்கியிருக்கின்றன. மருதாணியை ஆயுர்வேத மருத்துவத்தில் காயங்களை, கொப்புளங்களை சரியாக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கூந்தல் வளரவும் பயன்படுத்துகிறோம்.
* மருதாணி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும். சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி அருமருந்தாகும்.
* நகங்களில் வரும் பூஞ்சைக் கிருமி தாக்குதல், நகச்சுற்று போன்ற பிரச்னைகளுக்கும் மருதாணியை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும். நகங்களின் இடுக்கில் சீழ்கட்டி இருந்தால் மருதாணியுடன், மஞ்சள் அரைத்துப் பூசலாம்.
* தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதால் வரும் சேற்றுப்புண்கள், வேனல் கட்டிகள், கொப்புளங்களுக்கும் மருதாணி நல்ல மருந்து.
* மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்க மாத்திரை தேவையின்றி நல்ல தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் அது குணமாகும்.
* மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும்.
மருதாணி இலையைத் தேர்வு செய்வது, ரெடிமேட் கோன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், அவற்றில் கலக்கப்படுகிற ரசாயனங்கள், அவை ஏற்படுத்துகிற பாதிப்புகள், வீட்டிலேயே மருதாணி தயாரிப்பது எப்படி என்கிற தகவல்கள் அடுத்த இதழிலும்!ld4440

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button