சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.
முதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது சிறந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண்பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல்எளிதில் சோர்வடைந்து விடும்.
இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைகளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையில் சமன் செய்ய உதவும். தளர்வான உடைகள், தரமான காலணிகளை அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல் மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். ஓய்வுநேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.
சிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது. முன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும்.
தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி பெறும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.