பொதுமக்கள் சொல்வழக்கில் அழைக்கிற ‘மூளைக் காய்ச்சலுக்கு’ (Brain Fever), மருத்துவத்துறையில் இரண்டு பெயர்கள். ஒன்று, ‘மூளை அழற்சிக் காய்ச்சல்'(Encephalitis). மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுவதால், இந்த காய்ச்சல் உண்டாகிறது. மற்றொன்று, ‘மூளை உறை அழற்சிக் காய்ச்சல்’ (Meningitis). இது மூளை உறைகள் பாதிக்கப்படுவதால் உண்டாகிறது. இவற்றில் மூளை உறை அழற்சிக் காய்ச்சல் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். இப்போது மூளை அழற்சிக் காய்ச்சல் குறித்து் பார்ப்போம்.
‘ஜப்பானீஸ் – பி’ (Japanese – B) எனும் வைரஸ் கிருமியால் இந்தக் காய்ச்சல் ஏற்படுவதால், ‘ஜப்பானிய மூளைக் காய்ச்சல்’ ( Japanese – B Encephalitis ) என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்த நோய் எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடியதுதான் என்றாலும், ஒரு வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. முக்கியமாக, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள, சுகாதாரம் குறைந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகளையும் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஊட்டச்சத்தும் குறைவாக உள்ள குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது.
நோய் வரும் வழி:
இந்த வைரஸ் கிருமிகளுக்குப் பிறந்த வீடு, பன்றிகள். புகுந்த வீடு, கொசுக்கள். விருந்தினர் வீடு, மனிதர்கள். ஒருமுறை பாதிக்கப்பட்ட பன்றிகளின் ரத்தத்தில் இந்த வைரஸ் கிருமிகள் குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இவை எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தைத் தாக்கப் புறப்படும்.
இந்தியாவில் நெல் வயல்களிலும், பன்றி வளர்க்கப்படும் இடங்களிலும் ‘குலிசின்’ (Culicine) எனும் கொசுக்கள் காணப்படுகின்றன. இவை இரவில் மட்டுமே கடிக்கக்கூடியவை. ஜப்பானீஸ் – B வைரஸ் உள்ள பன்றிகளை இவை கடிக்கும்போது, கிருமிகள் கொசுக்களின் உடலுக்குள் புகுந்துகொள்ளும். அந்தக் கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, ரத்தத்தின் வழியாக மூளைக்குச் சென்று, மூளைத் திசுக்களை அழிக்கத் தொடங்குகின்றன. இதன் விளைவால், காய்ச்சல் வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது.
அறிகுறிகள்:
திடீரென்று கடுமையான காய்ச்சல் வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி உண்டாகும். அடிக்கடி குமட்டலும் வாந்தியும் ஏற்படும். மனக்குழப்பம் ஏற்பட்டு, மனநோயாளிபோல் நடந்துகொள்வார்கள். வலிப்பு வரும். இந்த வலிப்பைத் தொடர்ந்து அந்த நபர் சுயநினைவை இழப்பார். பிறகு, ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்கு உள்ளாவார். இது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். இந்தக் காய்ச்சலின்போது, பாதிக்கப்பட்ட மூளைத் திசுக்கள் நிரந்தரமாக அழிந்துபோவதால், இதற்குச் சிகிச்சை பெறும் நோயாளி உயிர் பிழைத்தால்கூட பேச்சு நின்றுபோவது, பார்வை பறிபோவது, காது கேட்காமல்போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற ஊனங்கள் நிலைத்துவிடுகின்ற ஆபத்துகளும் இதில் உண்டு.
தடுப்பூசி வகை:
ஜப்பானிய மூளைக் காய்ச்சலைத் தடுக்க, தற்போது மூன்றுவிதத் தடுப்பூசிகள் உள்ளன. 1. செல் கல்ச்சர் உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Live attenuated cell culture-derived Vaccine). 2. வீரியம் குறைக்கப்பட்ட செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி( Inactivated cell culture-derived Vaccine). 3. வீரியம் குறைக்கப்பட்ட வீரோ செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Inactivated Vero cell culture-derived Vaccine).
போட்டுக்கொள்ளும் முறை:
செல் கல்ச்சர் உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி:
குழந்தைக்கு 8 மாதம் முடிந்ததும் ஒருமுறையும், ஒன்றரை வயது முடிந்ததும் ஒருமுறையும் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசி மருந்தின் அளவு அரை மி.லி. இதைப் புஜத்தில் தோலுக்கு அடியில் (Sub-cutaneous Route) செலுத்த வேண்டும். மற்ற தடுப்பூசிகள் போடப்படும்போது, இதையும் போட்டுக்கொள்ளலாம். ஆனால், தனித்தனி இடங்களில் போட்டுக்கொள்ள வேண்டும். இது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே போடப்படுகிறது. இரண்டு வயதுக்குள் போட்டுக்கொள்ளாதவர்கள், அதற்குப் பிறகு 15 வயதுக்குள், எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
வீரியம் குறைக்கப்பட்ட செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி:
குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணையையும் நான்கு வாரங்கள் இடைவெளி விட்டு இரண்டாம் தவணையையும் போட வேண்டும், இதன் அளவு 0.25 மில்லி. புஜத்தில் அல்லது தொடையில் தசை ஊசியாகப் போட வேண்டும். மூன்று வயதுக்கு மேல் முதல்முறையாகப் போட்டுக்கொள்கிறவர்களுக்கு அரை மில்லி அளவில் போட வேண்டும்.
வீரியம் குறைக்கப்பட்ட வீரோ செல் கல்ச்சர் நுண்ணுயிரித் தடுப்பூசி:
குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணையையும் நான்கு வாரங்கள் இடைவெளி விட்டு இரண்டாம் தவணையையும் போட வேண்டும், இதன் அளவு அரை மில்லி. புஜத்தில் அல்லது தொடையில் தசை ஊசியாகப் போட வேண்டும்.
யாருக்கு மிக அவசியம்?
இந்தக் காய்ச்சல் கொள்ளை நோயாகப் பரவுகின்ற பகுதிகளில் வசிப்பவர்கள், ரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும், மருத்துவ ஆய்வகங்களிலும் பணிபுரிபவர்கள், ஆரம்பச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இந்தத் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நோய் பரவியுள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்கள் பயணத்துக்கு ஒரு மாதம் முன்பு இதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
யார் போட்டுக்கொள்ளக் கூடாது?
இந்தத் தடுப்பூசிக்கும் ‘ஜென்டாமைசின்’ ஊசி மருந்துக்கு அலர்ஜி உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ஏற்கனவே மூளை மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள், டைபாய்டு, மலேரியா, சிறுநீரக நோய் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எய்ட்ஸ் நோய், புற்றுநோய் உள்ளவர்கள் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது.
பக்கவிளைவுகள்:
தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், வலி, அரிப்பு, தோல் சிவப்பது, செந்தடிப்புகள் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். இரண்டு நாட்களுக்கு பாராசிட்டமால் மாத்திரை அல்லது திரவ மருந்து கொடுத்தால் காய்ச்சல் குறைந்துவிடும்.
மூளைக் காய்ச்சலை முற்றிலும் தவிர்க்க:
பன்றி வளர்ப்பில் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதைத் தவிர்ப்பது, திறந்தவெளிச் சாக்கடைகளை மூடுவது, கொசு ஒழிப்பு மருந்தை முறைப்படி தெளிப்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கடியைத் தவிர்த்தால், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் எனும் கொடிய நோய்க்கு முடிவு கட்டலாம்.