‘குழந்தை பிறந்த முதல் வருடத்தில், அதன் வளர்ச்சி சீராக உள்ளதா?, அதன் நடவடிக்கைகள் இயல்பாக உள்ளனவா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது முக்கியம்” என்று பெற்றோர்களை வலியுறுத்தும் உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த், குழந்தையின் ஒரு வயது வரை, அந்தந்த மாதத்தில் அதனிடம் எதிர்பார்க்கக்கூடிய வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
வளர் மைல்கற்கள்!
”பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியை, அதன் வயதை ஒத்த மற்ற குழந்தைகளை வைத்து சரிபார்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், குப்புற விழுவது, நடப்பது, பேசுவது என இவையெல்லாம் குழந்தைக்கு குழந்தை மாறுபடலாம். ஒரு குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்பதை அறிய உதவும் பொதுவான வளர் மைல்கற்கள் இங்கே…
இரண்டாம் மாதம்…
* பிரகாசமான வண்ணங்களை நோக்கி தலையைத் திருப்பும்.
* பெற்றோரின் குரலை அடையாளம் கண்டுகொள்ளும்.
* காலைச் சுழற்றி உதைக்கும்.
* தாய்ப்பால், புட்டிப்பால் அடையாளம் கண்டுகொள்ளும்.
* அதிக ஒலி அல்லது சத்தமாக யாராவது பேசினால் அமைதியாகிவிடும்.
நான்காம் மாதம்…
* தலை அசையாமல் நின்றிருக்கும்.
* பேசுவதைப்போல் பாவித்து ஒலி எழுப்பும்.
* பெற்றோர் தன்னுடன் பேசி விளையாடுகையில் தானும் ஒலியை எழுப்ப முயற்சி செய்யும்.
* நகரும் பொருட்களை தன் கண்களால் பின் தொடரும்.
* தெரிந்த மனிதர்கள்/பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளும்.
ஐந்தாம் மாதம்…
* உதவியின்றி உட்கார முடியும்.
* தவழும்.
* மற்றவர்களின் ஒலி மற்றும் சைகைகளைப் பின்பற்றும்.
ஆறாவது மாதம்…
* ஒலி வரும் திசையை நோக்கித் திரும்பும்
* பெயரைக் கூறி அழைத்தால் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்.
* தனக்கு வேண்டிய பொருளை நோக்கி நகர்ந்துசென்று எடுத்துக்கொள்ளும்.
* மல்லாந்து படுக்கும்போது தன் பாதங்களுடன் விளையாடும்.
* புட்டிப்பால் பாட்டிலை பிடித்துக்கொள்ள முயற்சி எடுக்கும்.
* பழகிய முகங்களைத் தெரிந்துகொண்டு, அந்நியர்களை இனம் கண்டுகொள்ளும்.
* பேச்சு மற்றும் ஒலியைப் பின்பற்ற முயற்சி செய்யும்.
9 மாதம்…
* பிடித்த பொம்மைகளை தன்னுடன் வைத்திருக்கும்.
* ‘இல்லை’ என்று பெரியவர்கள் மறுப்பதை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும்.
* தன் விரல்களால் பொருட்களைக் குறிப்பிட்டுக் காட்டும்.
* அந்நியரைக் கண்டாள் மிரளும்.
ஒரு வயது…
* சிறிது நேரத்துக்கு மற்றவர்களின் துணையின்றி நிற்க முடியும். சில குழந்தைகள் நடப்பார்கள், ஓடுவார்கள்.
* அலைபேசியில் பேசுவது, கப்பில் தண்ணீர் குடிப்பது என பெரியவர்களைப்போல் பாவிக்கும்.
* ‘கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடினால் அதைப் புரிந்துகொள்ளும்.
* கற்றுக்கொடுத்தால் வணக்கம், ஹாய், பை எல்லாம் கற்றுக்கொள்ளும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் சின்னப் பொருட்களை எடுத்துப்போடும் திறன் வளர்ந்திருக்கும்.
* ‘ம்மா’, ‘ப்பா’ என்று வார்த்தையை ஒத்த ஒலிகளை வெளிப்படுத்தும்.
இந்த வளர்ச்சியும் நடவடிக்கைகளும் குழந்தைக்கு குழந்தை ஓரிரு மாதங்கள் மாறலாம். மூன்று மாதத்தில் குப்புறப் படுக்க வேண்டிய குழந்தை, சமயத்தில் ஐந்து மாதத்தில்கூட குப்புறப் படுக்கலாம். ஆனல், ஏழு, எட்டு மாதம் வரை கூட குப்புறப் படுக்கவில்லை எனில், அந்தக் குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா என்பது குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். குறிப்பாக, பின்வரும் அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்.
* குப்புறப்படுப்பது, தவழ்வது, உட்கார்வதில் அதிக தாமதம் ஏற்படுவது.
* அம்மாவின் கண்களைப் பார்க்காமல், அம்மாவிடம் சிரிப்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது
* கைதட்டுவது, கிலுகிலுப்பை போன்ற ஒலி எழுப்பிச் செய்யும் விளையாட்டுக்களுக்குச் சிரிக்காமல், எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இருப்பது.
* ஒலிக்கோ, பெயர் சொல்லி அழைத்தாலோ திரும்பிப் பார்க்காமல் இருப்பது.
* கொஞ்சி விளையாடும்போதுகூட உணர்ச்சியற்று இருப்பது.
இன்றைய மருத்துவ உலகில் எந்தப் பிரச்னையும் குணப்படுத்தக் கூடியதுதான். அதை நாம் எவ்வளவு விரைவாகக் கண்டறிகிறோமோ, அவ்வளவு விரைவாக சிகிச்சையும் குணமும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்" என்கிறார் டாக்டர் சித்ரா அரவிந்த்.