பல் துலக்குவதை பலரும் சாதாரணமான ஒன்றாக நினைக்கின்றனர். ஆனால் பற்களை சரியான முறையில் துலக்காவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் பற்களை துலக்குவதற்கு ஒருசில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றி வந்தால், வாயில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி, பலர் பற்களை சுத்தப்படுத்தும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டுகளை தேர்ந்தெடுப்பதில் கூட தவறு செய்கின்றனர். இன்னும் சிலர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பும் போது சரியாக வாயைக் கூட கழுவுவதில்லை. இப்படியெல்லாம் இருந்தால், பின் பற்களில் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் ஏற்படாமல் இருக்குமா என்ன?
இதுப்போன்று பல தவறுகளை நாம் அன்றாடம் செய்து வருகிறோம். அவற்றில் மாற்றம் கொண்டு வந்தால், நிச்சயம் வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள், ஈறு பிரச்சனைகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். சரி, இப்போது பற்களை துலக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்ப்போம்.
தவறான டூத் பிரஷ் விலை குறைவாக உள்ளது என்று பற்களை துலக்க தவறான டூத் பிரஷ்களைப் பயன்படுத்தினால், அது வாய் ஆரோக்கியத்தையே பாதிக்கும். எனவே பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் முட்கள் மென்மையாகவும், தலைப்பகுதி மிகவும் பெரியதாக இல்லாமல் வாயின் மூலை முடுக்குகளில் சென்று வாயில் தங்கியுள்ள உணவுத்துகள்களை வெளியேற்றும் அளவிலான டூத் பிரஷ்ஷை வாங்க வேண்டும்.
கடுமையான தேய்ப்பது சிலர் வாயில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க வேண்டுமென்று டூத் பிரஷ்ஷைக் கொண்டு கடுமையாகத் தேய்ப்பார்கள். ஆனால் அப்படி தேய்த்தால், ஈறுகள் புண்படுத்தப்படும். ஈறுகள் அதிகமாக புண்பட்டால், அதனால் ஈறுகளில் தொற்றுகள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படக்கூடும். எனவே எப்போதும் மென்மையாகவே பற்களைத் துலக்க வேண்டும்.
தேய்க்கும் நேரம் பற்களை குறைந்தது காலையில் 2 நிமிடங்களும், இரவில் இரண்டு நிமிடங்களும் துலக்கினால் போதுமானது. பற்களில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று மணிக்கணக்கில் பற்களைத் துலக்கினால், பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும். அதுவே மிகவும் குறைந்த நேரம் பற்களைத் துலக்கினால், வாய் துர்நாற்றம் ஏற்படும்.
தவறான பேஸ்ட் பேஸ்ட்டின் சுவை நன்றாக உள்ளது என்று தவறான பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவதும் ஆபத்தானதே. ஆகவே பேஸ்ட் வாங்கும் முன் அதில் புளூரைடு, ட்ரைக்ளோசன், ஜைலிட்டால் போன்ற பொருட்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இவை இருந்தால், அந்த பேஸ்ட்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் புளூரைடு நிறைந்த பேஸ்ட் தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் இது தான் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
வாயை சரியாக கொப்பளிக்காதது எப்போதும் பற்களைத் துலக்கிய பின், வாயை சுத்தமான நீரில் குறைந்தது 5 முறையாவது நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களைத் துலக்கி வெளிவந்த துகள்கள் வாயில் இருந்து முற்றிலும் வெளியேறாமல், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே நீடித்தால், ஈறுகளும் பாதிக்கப்படும்.
கடைவாய்ப் பற்களில் கவனம் அவசியம் பலரும் பற்களை துலக்கும் போது முன்புறம் மட்டும் நன்கு தேய்ப்பார்கள். ஆனால் முன் பற்களை விட, கடைவாய்ப் பற்கள் தான் உணவுப் பொருட்களை உடைப்பதால், அவற்றில் உணவுத்துகள்கள் அதிகம் மாட்டியிருக்கும். எனவே பற்களைத் துலக்கும் போது, கடைவாய்ப் பற்களின் மீது சற்று அதிக கவனம் செலுத்துங்கள்.
பிரஷ்ஷை மாற்றவும் உங்கள் பிரஷ் என்ன தான் பல மாதங்களாக புதிது போல் இருந்தாலும், கட்டாயம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், வாயில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து, வாய் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும்.
மௌத் ப்ளாஷ் மௌத் ப்ளாஷ் பயன்படுத்துவதன் மூலம் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள சிறு உணவுத் துகள்களை வெளியேற்றிவிடலாம். ஆனால் இதை யாரும் செய்வதில்லை. தினமும் செய்ய முடியாவிட்டாலும், ஒருநாள் விட்டு ஒருநாள் செய்வது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நாக்கு சுத்தப்படுத்தாமல் இருப்பது நாக்குகளின் மேல் உள்ள வெள்ளைப்படலமும் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஆனால் இந்த செயலையும் மக்கள் பலர் தவிர்க்கின்றனர். இப்படி தவிர்த்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க முடியாது. எனவே தினமும் நாக்கை மறக்காமல் சுத்தம் செய்யுங்கள்.