பயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவழிக்க நினைத்த அருணா ராஜரத்தினத்தின் எண்ணத்தில் சட்டென உதித்த புடவை வியாபாரத்தின் பரிணாமம்தான் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ‘சிருங்காரம்’ பொட்டிக். பெயருக்கேற்றவாறே நேர்த்தியான புடவைகள், கண்கவர் சல்வார்கள்! ”எங்களுக்கு மூணு பொண்ணுங்க… ஒரு பையன். எல்லோரையும் நல்லாப் படிக்க வெச்சு, பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரை காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடாத குறைதான். எதுக்கும் நேரமே இருந்ததில்லை.
பொண்ணுங்க எல்லாம் புகுந்த வீட்டுக்குப் போய், பையனும் படிக்கிறதுக்குப் போனதும், வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. என் பொண்ணுங்க கட்டுற புடவைகளையும், என்னோடதையும் பார்த்துப் பாராட்டாதவர்களே இல்லை. ‘எல்லோருமே ரொம்ப நல்லாயிருக்கு… உனக்கு மட்டும் இப்படி அருமையான டிசைன்ஸ் எங்க கிடைக்கு’துன்னு கேட்பாங்க. அப்படி கேட்கிறவங்களுக்காக புடவைகளை வாங்கிட்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சேன். அதுவே புடவைகளை வீட்டில் வெச்சு சேல்ஸ் பண்ற அளவுக்கு வளர்ந்தது.
பிறகு ‘புடவை சேல்’ போட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்த்த என் ரெண்டாவது பொண்ணு நாச்சியம்மை, ‘சிருங்காரம்’கிற பேர்ல ஃபேஸ்புக்ல புடவைகளைப் போட்டு, ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணினதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். சென்னை மட்டுமல்ல… வெளியூர், வெளிநாட்டிலே இருந்தெல்லாம் புடவைகளுக்கு கஸ்டமர்ஸ் பெருகினாங்க. வீட்டில் ஒரு அறையில் வெச்சு நடத்திட்டிருந்த எங்க புடவை பிசினஸை பெரிய லெவல்ல பண்ணலாம்கிற தைரியத்தை, அந்த ஃபேஸ்புக் வாடிக்கையாளர் கூட்டம் கொடுத்துச்சு. அதுவரை ‘சாஃப்ட் சேல்’ ஆக இருந்த ‘சிருங்காரம்’, இதோ இப்போ ‘ஹாட் சேல்’ ஆக மாறிடுச்சு!” என்கிறார் அருணா.
கடை ஆரம்பித்து 6 மாதங்களே ஆகிறது. அதற்குள்ளேயே ஏராளமான வாடிக்கையாளர்கள். காரணம் புடவைகளின் தரம். உற்பத்தி செய்யும் இடங்களுக்கே நேரடியாகச் சென்று, டிசைன்களை தேர்ந்தெடுக்கிறார்கள். நடுத்தரப் பிரிவினருக்கு ஏற்ற வகையில் விலை. ரூ.300ல் தொடங்கி ரூ.20 ஆயிரம் வரையிலான புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சல்வார் மெட்டீரியல், குர்தீஸ் அனைத்துமே ரூ.500 முதல் கிடைக்கின்றன.
”சூரத், வாரணாசி, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், ஆந்திரா, செட்டிநாடு, சேலம், ராசிபுரம்னு எங்கெல்லாம் புடவை நெசவுத் தறிகள் இருக்கோ, அங்க நேர்ல போய் தேர்ந்தெடுக்கிறோம். எங்களுக்குப் பிடிச்சதாகவும், அதே நேரம் கஸ்டமர்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிற புடவைகளை மட்டுமே எடுத்துட்டு வர்றோம். ஒரு டிசைனுக்கு ஒரு புடவைதான் செலக்ட் செய்வோம். ரொம்பப் பிரமாதமாக இருந்தால்தான் ரெண்டு எடுப்போம். சில டிசைன்ஸ் பிடிச்சிருக்குன்னு வாடிக்கையாளர் சொன்னாங்கன்னா, அதை ஸ்பெஷலா தறியில் போட்டுக் கொடுப்போம்.
இப்படி ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செலக்ட் பண்றதாலதான், வித்தியாசமான கலெக் ஷன்ஸ் கொடுக்க முடியுது” என்கிற நாச்சியம்மை, இன்டீரியர் டெகரேஷன் படித்திருப்பதோடு, ஃபேஷன் டிசைனிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவர். இந்த ஆர்வம்தான் ‘சிருங்காரம்’ உருவாக அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது.
”நாங்க இதைச் செய்ய ஆரம்பிச்ச புதுசுல, ‘இதெல்லாம் என்ன வேலைன்னு பண்ணிட்டிருக்கீங்க’ன்னு சலிச்சுக்கிட்ட கணவர், இப்போ உற்சாகமாக எங்களுக்கு சப்போர்ட் பண்றார். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேணும்? புடவை, சல்வார் சேல்ஸோடு, டிசைனர் பிளவுஸ்களும் தைச்சுக் கொடுக்கிறோம். டிசைனர் அனார்கலியும் கூட!
இப்போ நல்ல பளிச்சுனு இருக்கிற நியான் கலர்ஸ், லைட் வெயிட்டுக்கு முன்னுரிமை கொடுக்கிறாங்க. வின்டேஜ் டிசைன்களை காலேஜ் பொண்ணுங்களும் விரும்பறாங்க. ஒரு காலேஜ் பொண்ணு ‘பாலும் பழமும்’ கட்டம் போட்ட புடவை கேட்டாங்கன்னா பார்த்துக்குங்க!” என்றபடியே பனாரஸ்களையும் போச்சம்பள்ளிகளையும் ராக்கில் அடுக்குகிற அருணா, “என் பொண்ணுக்கு ‘கிட்ஸ் செக் ஷன்’ ஆரம்பிக்கணும்னு ஆசை. கூடிய சீக்கிரமே குழந்தைகளுக்கான ‘எக்ஸ்க்ளூஸிவ்’ உடைகள் வாங்கி வைக்கப் போறோம்” என்று உற்சாகமாக தங்கள் எதிர்காலத் திட்டம் சொல்கிறார் அருணா.
புதிய டிசைன்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, அதன் மூலம் வரும் ஆர்டர்களுக்கு கூரியர் மூலம் புடவைகளை அனுப்புகிறர்கள். சென்னைக்குள் அனுப்புவதென்றால் இலவசம். வெளியூர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சினிமா மற்றும் டி.வி. பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என சிருங்காரத்துக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.”நடுத்தரக் குடும்பத்துப் பெண்களையும் பொட்டிக் வரவைக்கணும். அதுதான் எங்க ஆசை” என்று அம்மாவும் பெண்ணும் கோரஸாக குரல் எழுப்புகின்றனர்!