மனிதர்களின் உடலில் வயதுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படி 30 வயதை கடந்தவர்களின் உடல்நிலை அதிகப்படியான மாற்றங்களைச் சந்திக்கிறது. அவ்வாறான காலத்தில் (30 களில்) இருப்பவர்கள் தங்கள் உடலையும், மனதையும் கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும்.
உடற்பயிற்சி முக்கியம்
உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்வது இன்றியமையாதது. உடற்பயிற்சி செய்வதற்கு பொருத்தமான நேரத்தை முடிவு செய்யுங்கள். முதலில் நடைபயிற்சி, மெதுவான ஜாகிங், சிட் அப்கள் போன்ற லேசான பயிற்சிகளுடன் தொடங்குங்கள்.
நீங்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசனை கேட்பது நல்லது. இதன்மூலம் அவர்கள் உங்களுக்கு சரியான வழிமுறையை காண்பிப்பர். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதிசெய்யும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம் வேண்டாம்
பொதுவாக 30களின் வயது கொஞ்சம் சுயநலமாகவும், உங்கள் சொந்த அமைதியைப் பற்றி சிந்திப்பதற்கான காலமும் ஆகும். உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு சில எதிர்மறையான சிந்தனை கொண்ட நபர்களை விலக்கி வையுங்கள். உங்களை பாதுகாப்பற்றதாக உணரச் செய்யக்கூடிய சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வது உள்ளிட்ட சில கடினமான, துணிச்சலான முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அல்லது அலுவலக வேலைகள் எதுவாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் செய்ய முடியாது என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். மன அழுத்தம், பதற்றம் ஆகியவை இருதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறவாதீர்கள்.
உடல் பருமன்
முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
எலும்பு ஆரோக்கியம்
30 வயதை கடப்பவர்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் முக்கியமான ஒன்றாகும். பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் காணப்படுகிறது. இரும்பு மற்றும் பிற வைட்டமின்கள் நிறைந்த பச்சை காய்கறிகளும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
முக்கிய குறிப்பு
உங்கள் உடலில் ஏதுனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மருத்துவரை ஏமாற்றுகிறேன் என்று, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இது பின்னாளில் அபாயமாக கூட அமையலாம்.