0 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் 3 பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.
30 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் பயிற்சி
முப்பதுகளைக் கடந்த பெண்களுக்கு, மிகப் பெரிய பிரச்சனையே உடல்பருமன்தான். குழந்தைப்பேறுக்குப் பின் கவனிக்காமல்விட்ட உடலை, வருடங்கள் தாண்டிய பின் குறைக்க முடியாமல் மன உளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.
பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg):
தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும். இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
ஹிப் அவுட்டர், ஹிப் இன்னர் (hip abductor and adductor exercises) :
வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையால் தலையைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இடது கையை மடித்து, முன்பக்கம் தரையில் பதிக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, இடது காலை 10 முறை இயன்றவரை உயர்த்தி இறக்க வேண்டும். இதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். இடுப்புப் பகுதி, தொடைப் பகுதி சதைகள் வலுப்பெறும்.
சூப்பர் மேன் (Super man) :
தரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்பக்கம் நீட்டியபடி, கால்களைத் தரையில் படாதபடி உயர்த்திக்கொள்ள வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: இதயம் வலிமை பெறும். முதுகுத் தண்டுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தொடைப் பகுதியில் இருக்கும் சதை வலிமை அடையும்.