நீரிழிவு நோய் சிக்கல்களைத் தடுப்போம். நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ்வோம்.
நீரிழிவு நோய் சிக்கல்களை தடுப்போம்
நீரிழிவு நோய் என்று தெரிந்தவுடன், நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், நீரிழிவுநோயை நல்லக்கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே. அதற்கு நடைமுறை வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
1. உணவில் கட்டுப்பாடு, 2. உடலுழைப்பு, 3. யோகா, தியானம், 4. மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து ஒழுங்காக எடுத்துக் கொள்ளுதல். நீரிழிவு நோயைத் தடுக்க முடியும், ஆனால், முற்றிலும் குணப்படுத்தமுடியாது. நிச்சயம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புக்களும் பாதிக்கப்படும். 1. கண்கள், 2. நரம்புகள், 3. சிறுநீரகம், 4. இதயம், 5. கால்கள் மற்றும் பாதங்கள் 6. தோல் ஆகியவை பாதிக்கப்படும். நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நிச்சயமாக குணப்படுத்தலாம்.
1. கண்கள்:
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும் சாத்தியம் 20 மடங்கு அதிகம். கண்கள் பாதிப்பதற்கு ‘ரெட்டினோபதி” என்று பெயர். இதை ஆரம்பநிலையில் கண்டுபிடித்தால் ‘லேசர்” சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். கண்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால்தான் பார்வை மங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
2. நரம்புகள்:
பெரும்பாலும் கால்களிலுள்ள நரம்புகள் உணர்ச்சியற்றுப் போகலாம். சிலசமயம் குத்துவது, குடைச்சல் போன்ற வலியும் ஏற்படலாம்.
3. சிறுநீரகம்:
நீண்டநாட்களாக, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை HbA1C என்ற சராசரி சர்க்கரையின் அளவைக் கண்டிப்பாக 7%க்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும். புகைபிடிப்பது, புகையிலையைப் பயன்படுத்துவது, மது அருந்துவது ஆகியவற்றை அடியோடு நிறுத்த வேண்டும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதை உடனடியாக சிகிச்சை மூலம் குறைக்க வேண்டும். அதிக உடல் எடையை கண்டிப்பாக குறைத்தல் வேண்டும்.
4. இதயம்:
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு, நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், வெகுவாக இதயமும் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்புவலி, மூச்சுத்திணறல், ஓய்வில் இருக்கும் போது கூட திடீர் மார்பு வலி ஏற்படலாம். நீரிழிவு நோய் வந்தால், பெண்களுக்கும் அதிகமாக இதயநோய் வருகிறது. நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால், வலி தெரியாமல் மாரடைப்பு வந்துவிடுகிறது.
5. கால்கள் மற்றும் பாதங்களில் உண்டாகும் சிக்கல்கள்:
சூடான தரையில் சரியான காலணியில்லாமல் நடக்கக்கூடாது. தினமும் கால்களை கண்ணாடி முன் வைத்து, புண், வெட்டு அல்லது ஏதும் குத்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
6. தோலில் உண்டாகும் சிக்கல்கள்:
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு எரிச்சல் அரிப்பு, தோல் தடித்தல், தோல் சம்பந்தமான தொல்லைகள் அதிகம் வரவாய்ப்பு உள்ளது.