எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பு அல்ல’ என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக நெஞ்சுவலி ஏற்பட்டாலே அது மாரடைப்புக்கான அறிகுறி என அனைவரும் பயப்படுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் இதய நோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில் இதய நோய் வராமல் தடுப்பதற்கான செயல் விளக்கங்களோடு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
முகாமை மியாட் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெஞ்சுவலி என்றால் அது மாரடைப்பு அறிகுறி என மக்கள் கருதுகின்றனர். அது தவறு. இதய வால்வுகள் சரியாக செயல்படாதது, ரத்த குழாய்கள் தடித்து இருத்தல் போன்றவையால் நெஞ்சுவலி ஏற்படும். 60 வகையான இதய நோய்கள் இருக்கின்றன.
சில இதய நோய்கள் உணவு பழக்க வழக்கம் போன்ற வாழ்க்கை நடைமுறையால் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சில இதய நோய்கள் மரபணு கோளாறுகளால் உருவாகிறது. அவற்றை தற்போது மருத்துவ முன்னேற்றத்தால் கண்டுபிடித்து குணப்படுத்த முடியும்” என்றார்.
முகாமில் மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ், ஆஸ்பத்திரி தலைவர் மல்லிகா மோகன்தாஸ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வி.வி.பாஷி உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டனர்.