இயற்கை தான் நமது வாழ்வாதாரம், அதை இழந்துவிட்டு வேற்று கிரகத்திற்கு செல்வது என்பது தாயின் கருவறையை அழித்துவிட்டு, வேசிமகள் தேடி செல்வதற்கு சமம். நமக்கே தெரியாமல், சில நேரங்களில் தெரிந்தும் கூட இயற்கையை அழித்து வருகிறோம். இதை காப்பாற்ற விஞ்ஞானிகள் தான் வர வேண்டும் என்றில்லை.
நாம் ஒவ்வொருவரும், நம்மால் முடிந்த இந்த சின்ன சின்ன செயல்களை பின்பற்றினாலே நமது இயற்கை இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும், இது நமது ஆரோக்கியத்திற்கும் கூட நல்லது தான்…..
நடந்து வரலாம் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் இடங்களுக்காவது நடந்து சென்று வரலாம். இது உடலுக்கும் நல்லது, ஓசோன் மண்டலத்திற்கும் நல்லது.
விளக்குகளை அணைத்து வையுங்கள் மின்சார சேமிப்பு, வீட்டிற்கு, நாட்டிற்கு, இயற்கைக்கும் மிக நல்லது. எனவே, தேவை முடிந்த பிறகு உடனே மின்னணு உபகரணங்களை அணைத்து விடுங்கள். முக்கியமாக லேப்டாப், கம்ப்யூட்டர், மின்விசிறி, டிவி போன்றவை. ஏன் உங்கள் கைப்பேசியை கூட இரவில் அணைத்து வைத்துவிட்டு சார்ஜ் செய்யலாம். பேட்டரியின் வாழ்நாள் கூடும்.
காகித பைகளை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக் பைகளுக்கு விடைக்கொடுத்து, இனி காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்த முயற்சி செய்வோம்.
தேவையில்லாத பில் முடிந்த பில்களை கூட ஈமெயிலில் பெரும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காகிதங்களை வீணடிக்காமல் இருந்தால் மரங்களின் உயிர் மிஞ்சும்.
ஆன்லைன் பரிவர்த்தனை நம்மில் பெரும்பாலானோர் கைகளில் இன்று டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. எனவே, முடிந்த வரை நேரடி பரிவர்த்தனையை தவிர்த்து, ஆன்லைனை பயன்படுத்த ஆரம்பிப்போம்.
பிளாஸ்டிக் குறைப்போம் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவை பிளாஸ்டிக் பெட்டிகளில் தான் வருகின்றன. எனவே, சின்ன, சின்னதாக நிறைய வாங்கி வீசுவதை தவிர்த்து, பெரிய பொருட்களை வாங்கி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம். அல்லது, இயற்கை முறைகளுக்கு மாறி, (முடிந்தால்…) முற்றிலுமாக கூட பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவலாம்.
குளிர் நீரை பயன்படுத்துங்கள் சுடுநீரைத் தவிர்த்து, முடிந்த வரை துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள். இது பல வகையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த உதவும்.
பிரதி எடுப்பதை தவிர்க்கலாம் ஸ்மார்ட் போன் யுகத்தில் பிரதி (XEROX) எடுப்பதை தவிர்த்து போட்டோ காபி, ஸ்கேன் காபி எடுத்து வைத்துக் கொண்டால், அழியவும் அழியாது, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.