பெண்களுக்கு மாதம்தோறும் வரும் மாதவிடாய் சமயங்களில் இந்த செயல்கள் செய்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதோடு ஒருசில செயல்களைத் தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நாள் முழுவதும் ஒரே பேடைப் பயன்படுத்தும் பழக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது யோனிப் பகுதியில் நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரத்தக்கசிவு உள்ளதோ இல்லையோ, 3-5 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியது அவசியம்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்தொற்றுக்களால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். ஆகவே மாதவிடாய் சுழற்சியின் போது சற்று கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை கொண்டு வரும். எனவே அந்த நாட்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
மாதவிடாய் காலத்தில் டயட் என்ற பெயரில் உணவுகளைத் தவிர்க்காதீர்கள். ஏற்கனவே இக்காலத்தில் ஆற்றல் குறைவாக இருப்பதோடு, இரத்தமும் வெளியேறி இருக்கும். ஆகவே தினமும் மூன்று வேளை தவறாமல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அடிக்கடி ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
மாதவிடாய் கால பிடிப்புக்களால் இரவில் தூங்குவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
பால் பொருட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மோசமாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள அராசிடோனிக் அமிலம் தான் காரணம். ஆகவே பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.