விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான்.
பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்
விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி.
உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது.
பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும். அத்தகைய பட்டு சேலைகள் நெய்யப்படும் ஊர்களை வைத்துதான் அதிகமாய் பிரபலமாகின்றன. காஞ்சீபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம் போன்ற தமிழக பகுதிகளும், பனாரஸ் போன்ற வெளி மாநிலத்தில் பல நகரங்களின் பெயர்களிலும் பட்டு சேலைகள் அழைக்கப்படுகிறது. அந்தந்த ஊரில் நெய்யப்படும் கைதிறன் அடிப்படையில் அவை தனிச்சிறப்பு சேலையாக உலக பிரசித்தி பெற்றுள்ளன.
பட்டு நூலின் முக்கியமான அம்சங்கள் :
உலகளவில் சீனாவிற்கு அடுத்தப்படியாய் இந்தியாவில் தான் பட்டு துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளுக்கான பட்டு நூலில் நான்கு வகைகள் உள்ளன. அதாவது, மல்பரி, டஸ்ஸர், எரி, முகா போன்றவை தான் அவை.
மங்கையர் மணங்கவரும் பட்டு நூல் வகையில் உலகளவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவது மல்பரி பட்டு தான். அதாவது உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 90 சதவீதம் மல்பரி பட்டு வகைதான் பயன்படுத்தப்படுகிறது.
மல்பரி வகை பட்டுப்புழுக்களில் இருந்து இந்த வகை பட்டு நூல் தயாரிக்கப்படுவதால் இதற்கு மல்பரி பட்டு எனப்பெயர். மல்பரி பட்டு நூல் வழவழப்பும், உறுதியும் கொண்டது. மல்பரி பட்டு நூலில் சாயங்கள் ஏற்றுவதும், விரும்பிய டிசைனை உருவாக்குவதும் சுலபமாக உள்ளன. அதிக உற்பத்தி, பயன்படுத்த லகுவான பட்டு நூல் என்பதால் மல்பரி பட்டு முதலிடம் பிடிக்கிறது.
டஸ்ஸர், எரி, முகா போன்ற பட்டு நூல்கள் அஸ்ஸாம் மற்றும் தென் கிழக்கு இந்தியாவில் உள்ள காட்டு பகுதியில் இயற்கையாக வளரும் பட்டு புழுவில் இருந்து தயாரிக்கப்படுபவை. இதன் உற்பத்தி மிக குறைவு என்பதால் இதன் விலையோ மிக அதிகமானது.
இந்த மூன்று ரக பட்டுகளை “வன்யா” என்று அழைப்பர். “வன்யா” ரக பட்டுகள் அதிக வழவழப்பின்றி பருத்தி நூல் போன்றே தோற்றமளிக்கும். மிகுந்த பழக்கப்பட்டவர்களுக்கு தான் இந்த பட்டை அறிய முடியும். மல்பரி பட்டு நூல் விலையை விட வன்யா ரக கழிவு பட்டே மூன்று மடங்கு விலை அதிகமானது.
அஸ்ஸாம் மக்கள் ‘வன்யா” ரக பட்டுகளைதான் விரும்பி அணிகின்றனர். உலக புகழ் பெற்ற இந்த வகை பட்டு நூல்களிலும் பல தரப்பட்ட ஆடைகள் நெய்யப்படுகிறது.
பட்டு சேலையின் தரமும், பாதுகாக்கும் விதமும் :
நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டு சேலை தரமானதா என்ற கேள்விக்கு விடையாய் மத்திய அரசு தரமான பட்டு சேலையின் மீது “சில்க் மார்க்” எனும் முத்திரையை பதித்து தருகிறது. இதன் மூலம் சாதாரண மற்றும் கலப்பட பட்டு சேலைகளை கண்டறிந்து வாங்க முடியும்.
பட்டு சேலையை வீட்டில் துவைப்பதைவிட டிரைவாஷ் கொடுப்பது உத்தமமானது. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பிறகு பட்டு புடவை எடுக்கும் போது மடிப்புபடிப்பாய் இழைவிட்டு விடும். பட்டு புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும்.
அதுபோல் இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து பாதுகாக்க வேண்டும். பட்டு சேலையின் மீது ஏதும் கறை படிந்தால் உடனே சாதாரண தண்ணீர் கொண்டே துடைத்து விடவும். அதிக கறை எனில் டூத்பேஸ்ட் கொண்டு துடைத்து விடலாம். பட்டு சேலை பளபளப்புடன் திகழ சிறந்த பராமரிப்பும் அவசியம்.