குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.
அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள்.
இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொது வான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.
பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம். வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்.
குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.