வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்
மருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. அதிலும், மார்பகப் புற்றுநோய், பெண்களை குறிவைத்துத் தாக்குகிறது.
மார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே பாஸ்கல் சாப்பினோ என்ற பேராசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் சாப்பினோ வெளியிட்டுள்ள தகவலில், பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாசனைத் திரவியத்தில் அலுமினிய உப்புகள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த அலுமினிய உப்புகள் கலக்காத வாசனைத் திரவியமும் ஆரோக்கியமானது என உறுதியாகக் கூற முடியாது.
இதுபோன்ற அலுமினிய உப்புகளை எலிகளின் மீது பரிசோதனை செய்தபோது, அவற்றின் உடலில் புற்றுநோய்க் கட்டிகளை உண்டாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது சந்தேகத்திற்குரியது என்றே கூறப்படுகிறது. மனிதர்கள் மீது இது புற்றுநோய்க் கட்டிகளை உண்டாக்குமா என்பதை 100 சதவீதம் இதுவரை உறுதியாகவில்லை.
ஆனால், அனைத்துப் பெண்களும் இதுபோன்ற வாசனை திரவியத்தைப் புறக்கணிப்பது நல்லது. மார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கும் மிக அரிதாக ஏற்படக்கூடும் என்பதால், அவர்களும் இதுபோன்ற திரவியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது என பேராசிரியர் சாப்பினோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.