வேனிட்டி பாக்ஸ்
சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள எப்படி எல்லாம் மெனக்ெகடுகிறோம் என்றும் சிவப்பழகு தருவதாக தவறான உத்தரவாதத்துடன் செய்யப்படுகிற சிகிச்சைகளைப் பற்றியும் அவற்றின் பக்க விளைவுகள் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். சிவப்பழகு சாதனங்களில் சேர்க்கப்படுகிற பயங்கர ரசாயனங்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றுடன், இயற்கையான முறையில் சரும நிறத்தை பளிச்சென மாற்றும் வழிகள் பற்றியும் தொடர்ந்து பேசுகிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.
“ஃபேர்னஸ் சிகிச்சைகளில் என்னென்ன ரசாயனங்கள் உள்ளன… அவை என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும் சிவப்பழகுக்கு ஆசைப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடாக இல்லை. பியூட்டி பார்லர்களிலும் சிவப்பழகுக்கான ஃபேஷியல்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கெமிக்கல்கள் உதவியில்லாமல் சருமத்தை வெளுப்பாக்குதல் என்பது மிகவும் சிரமம் என்பதால், வேறு வழியின்றி வாடிக்கையாளரின் தேவை அதுதான் என்ற நோக்கத்திலேயே அந்த சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. நன்கு பயின்று முறையாக அனுமதி பெற்ற பியூட்டி பார்லர்களில், பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் சிகிச்சைகளை அறிந்து, மிக வீரியமான ரசாயனங்களை தவிர்த்து சருமத்தை பாதிக்காத வகையில் சிகிச்சைகள் செய்கிறார்கள்.
இயற்கையில் சிவப்பழகு சாத்தியமா? மங்கிப்போன நிறத்தை புதுப்பித்தல் என்பதும், ஒருவரின் உண்மையான நிறத்தைத் திரும்பக் கொண்டு வரலாம் என்பதும் மட்டுமே சாத்தியமே தவிர, கருமையான நிறத்தை சிவப்பாக்குதல் இயலாத ஒன்று. இயற்கையான வழியில் நிறத்தை மேம்படுத்த ஆயிரம் வழிகள் நமக்கு இயற்கை அள்ளி வழங்கியுள்ளது. அவற்றில் சில… குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உண்டு. உண்மையில் குங்குமப்பூவுக்கு நிறத்தை மாற்றும் குணம் கிடையாது. ஆனால், வெயிலில் அலைந்தோ, சரியான பராமரிப்பின்றியோ சருமத்தில் ஏற்படும் பொலிவின்மையை குங்குமப்பூ கொண்டு சரி செய்யலாம்.
* குங்குமப்பூ ஒரு சிட்டிகை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் இளம் சூடான பால் விட்டு அது கரைந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அரைத்த பாதாம் விழுது கலந்து முகத்திலும் கழுத்திலும் பூசி ஊற வைத்து கழுவினால் சருமம் பிரகாசமடையும். முக்கியமாக மணப்பெண் மற்றும் மணமகன் இந்த ஃபேஸ்பேக்கை 10 நாட்கள் தொடர்ந்து உபயோகித்தால் அவர்களுடைய இயற்கையான நிறம் கிடைப்பது மட்டுமன்றி முகம் கண்ணாடி போல ஜொலிக்கும்.
* பாலில் கசகசா, வெள்ளரி விதை, இரண்டு பாதாம் பருப்பு போன்றவற்றை ஊறவைத்து அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து தினமும் உபயோகிக்க நிறம் மேம்படும்.
* பப்பாளி விழுதை மசித்து அத்துடன் பால்பவுடர், சிறிது தயிர் கலந்து தடவலாம்.
* தேனுடன் சிறிது எலுமிச்சைச் சாறும் பிரவுன் சுகரும் கலந்து தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் தகதகக்கும்.
* பார்லி அரிசியைப் பொடித்து அத்துடன் மோர், ஒரு சிட்டிகை மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள் அல்ல) கலந்து தடவலாம்.
* உருளைக்கிழங்கை மைய அரைத்து அதில் பாதாம் எண்ணெய் கலந்து தடவலாம்.
* ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கிடைக்கும் சீசனில் வாங்கி மிக்சியில் அரைத்து அத்துடன் தேன் மற்றும் கிளிசரின் கலந்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துத் தடவலாம்.
* நாட்டுமருந்துக் கடையில் துத்தி விதை மற்றும் மெலன் சீட்ஸ் வாங்கி சூடான பாலில் ஊற வைத்து அரைத்து தடவ நிறம் மேம்படும்.
* ஆவாரம்பூ பொடியுடன் சிறிது தயிர் மற்றும் சிறிது சர்க்கரை கலந்து தடவலாம்.
* மஞ்சள் பூசணிக்காயை (பரங்கிக்காய்) பாலுடன் அரைத்து அத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தடவலாம்.
* கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் மோரும் கலந்து தடவலாம்.
* கேரட் சாறுடன் ஆரஞ்சுச் சாறு, தேன், சிறிது சர்க்கரை கலந்து தடவ சருமம் புது நிறத்தில் ஜொலிக்கும்.
* எலுமிச்சை தோல் பொடியுடன் ரோஜா இதழ் பொடி கலந்து பால் விட்டு கலந்து உபயோகிக்கலாம்.
* ரெட் சாண்டல் பொடியுடன் பாலாடை, மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தடவலாம்.
* அதிமதுரம் பொடியுடன் கொத்தமல்லி இலைச்சாறு கலந்து தடவலாம்.
* வெள்ளை சோயாவையும் வெள்ளரி விதையையும் கலந்து பவுடராக்கி பால் கலந்து தடவலாம்.
* மகிழம்பூ பொடியுடன் கோரைக்கிழங்கு பொடி கலந்து சிறிது தேன் மற்றும் பால் கலந்து தடவலாம்.
* அன்னாசிப்பழச் சாறு மிகச்சிறந்த பிளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படும். அந்த சாற்றுடன் தேன் கலந்து தடவ நிறம் உடனே மேம்படும்.
* முட்டைகோஸ் சாற்றுடன் கிளிசரின், தேன் கலந்து தடவ சருமம் பளபளக்கும்.
* பன்னீர் திராட்சையை விதையுடன் அரைத்து அதில் சர்க்கரை கலந்து ஸ்கிரப்பாக தேய்த்தால் முகம் தகதகக்கும். அரோமா தெரபியில் முகத்தில் வரக்கூடிய எந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு. நிறத்தில் உண்டாகும் மாற்றங்கள் மற்றும் முகப்பொலிவு மேம்பட இன்ஹிபிட்டிங் தெரபி உண்டு. இந்த தெரபியில் லைம், கோரியாண்டர் லீஃப், இலாங்இலாங், பெடிட்கிரெய்ன், ஆல்மண்ட், ஆப்ரிகாட் கெர்னல் போன்ற ஆயில்கள் கொண்டு சிகிச்சை தரும் போது சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் வரை சென்று நிரந்தரமாக நிறம் மேம்பட்டு முகம் பொலிவுறச் செய்ய முடியும்.
எச்சரிக்கை
சிவப்பழகு சாதனத் தயாரிப்புகளில் உள்ள கெமிக்கல்கள்
* சிவப்பழகுத் தயாரிப்புகளில் பிளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படும் hydroquinoneனை 3% லிருந்து 4% வரை பக்கவிளைவுகள் இன்றி எடுக்கலாம். பெரும்பாலான நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் பிளீச்சிங் ஏஜென்ட் உள்ளது என்பதை மறைத்து விடுவார்கள். தொடர்ந்து உபயோகிக்கையில் சருமம் மிகவும் லேசாகி, அதன் பிறகு எந்த ஒரு சூழ்நிலையையும் தாங்க முடியாத நிலைக்கு சருமம் மாறிவிடும்.
ஸ்டீராய்டுகள் (Steroids)
இது முக்கியமாக, ”Faster and better results” என்று சொல்லப்படும் சிவப்பழகு பொருட்களில் உள்ளது. இது நிரந்தர வடுக்கள், பருக்கள், சரும அலர்ஜி மற்றும் நிரந்தர கருமையை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மெர்க்குரி (Mercury)
Prince of Wales Hospital, Hongkongல் சமீபத்தில் 36 ஃபேர்னஸ் கிரீம் பிராண்டுகளை ஆய்வு செய்த போது அவற்றில் மெர்க்குரி இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் 7 தயாரிப்புகள் சீனாவிலும், 5 தைவானிலும் தயாரிக்கப்பட்டவை. இவற்றின் முக்கிய பக்கவிளைவுகள் நரம்பு மண்டலத்தையே பாதிக்கக்கூடியவை. மெர்க்குரி ஒரு நியூரோ டாக்ஸின். அது சிறுநீரகங்களைக் கூட செயலிழந்து போகச் செய்யும் தன்மை கொண்டது.
ஹெக்ஸவலன்ட் குரோமியம் (Hexavalent Chromium)
இவை கலந்த ஃபேர்னஸ் தயாரிப்புகள் சில நேரம் புற்றுநோயையே உருவாக்கும் தன்மையுடையவை. ஆனால், இந்தியாவில் இது இல்லை என்பதில் சின்ன ஆறுதல்.
மெர்க்குரஸ் குளோரைட் (Mercurous Chloride)
இந்த மூலக்கூறுகள் உள்ள ஃபேர்னஸ் தயாரிப்புகள் நம்முடைய சிறுநீர்ப்பாதை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய தன்மை உள்ளவை.