நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் படர்தாமரையை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குப்பைமேனி, கீழாநெல்லி, தும்பை, பூண்டு ஆகியவை படர்தாமரைக்கு மருந்தாகிறது. வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாமரை தோலில் அரிப்பு, சிவந்த தன்மையை கொடுக்க கூடியது. படர்தாமரை ஏற்பட பூஞ்சை காளான்கள் காரணமாகிறது. இது உடலில் பரவி தோல் நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. படர்தாமரை நாளடைவில் சொரியாசிஸாக மாறி உடல் முழுவதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கீழா நெல்லி, குப்பை மேனியை பயன்படுத்தி படர்தாமரையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆறவைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.
தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. தோல் நோய்களை போக்கும் தன்மை கொண்டது. பூண்டுவை பயன்படுத்தி படர்தாமரைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட பூண்டு பூஞ்சை காளான்களை போக்கும். தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பசை எடுக்கவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விலகிப்போகும். தும்பை அற்புதமான மூலிகை. இது சளியை போக்க கூடியது. கண்களில் ஏற்படும் சிவப்புதன்மையை போக்கி குளிர்ச்சி தரும் மருந்து குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு மணத்தக்காளி மருந்தாகிறது. மணத்தக்காளி சிறிய பூக்கள், மிளகுபொன்ற காய்களை உடையது. ஈரலுக்கு பலம் கொடுக்கும் உணவாக விளங்குகிறது. உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம், கண்களுக்கு அதிக வேலை தருவது, கணினி முன்பு உட்கார்ந்து வேலை செய்வது போன்றவற்றால் கண்சிவப்பு தன்மை ஏற்படும். வாரம் இருமுறை மணத்தக்காளியுடன் வெங்காயம், பாசி பயறு சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் கண் எரிச்சல் போகும். உடல் குளிர்ச்சி பெறும். இரத்தம் சுத்திகரிக்கப்படும். ஈரல் பலப்படும்.