இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும்.
தொப்பையை குறைக்கும் புஜங்காசனம்
உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாவும் உதவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசனத்தை காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.
செய்யும் முறை :
விரிப்பில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
இந்த ஆசனம் செய்யும் போது கால் பாதம் முதல் இடுப்பு வரை தரையில் படிந்த நிலையில் இருக்க வேண்டும். தலையை நிமிர்த்தி மேலே பார்க்க வேண்டும்.