விவாகரத்து தம்பதிகள் குற்றவாளிகளைப் போல சமூகத்தால் பார்க்கப்படுவார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..
ஒரு சிலருடைய வாழ்க்கையில் விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத அங்கமாக அமைந்தாலும், அதிலுள்ள சிக்கல்கள் அதிகம். திருமணம் செய்யக்கூட அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். விவாகரத்திற்கு ஏற்படும் காலதாமதம், அலைச்சல், அவமானம், மன உளைச்சல் போன்றவை அவர்களை ரொம்பவும் கவலைப் படுத்தி விடும்.
திருமணம் என்பது இரண்டு பேருக்கான சம்பிரதாயம். ஆனால் அதில்தான் இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி அடங்கி இருக் கிறது. குறிப்பாக குழந்தைகளின் நலனை மனதில் கொண்டாவது தங்களுக்குள் மனம் விட்டு பேசி சுமுகமான உறவை தொடரலாம். அதை கருத்தில் கொள்ளாமல் தங்கள் இருவருக்குமிடையேயான மனஸ்தாபத்திற்கு விவாகரத்துதான் தீர்வு என்று முடிவு செய்து கோர்ட்டு படி ஏறினால் தீர்ப்பு வரும் வரை இரண்டு குடும்பங்களும் கோர்ட்டு வாசலில் அலைய வேண்டியிருக்கும்.
விசாரணை வரும்போதெல்லாம் இருவரும் தங்களுடைய வேலைகளை அப்படியே விட்டுவிட்டு கோர்ட்டுக்கு ஓட வேண்டியிருக்கும். தன் தரப்பு நியாயத்தை நிலை நிறுத்த, வழக்கிற்கு வலிமை சேர்க்க சில நேரங்களில் சில பொய்களையும் சேர்த்து சொல்ல வேண்டி இருக்கும். அந்த பொய், வீண்பழி ஒரு பெண்ணைப் பற்றியதாக இருந்தால் அவள் வாழ்க்கை மேலும் களங்கத்துக்கு உள்ளாகிவிடும். எதிர் தரப்போ அதற்கு ஆதாரங்கள் தேடி அலைய வேண்டியிருக்கும்.
அல்லது பொய் சாட்சிகளை தயார் செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்கு தாராளமாக பணத்தை வாரி வழங்க வேண்டியிருக்கும். அதே வேளையில் பொய் சாட்சிகளை கூர்மையான ஆயுதங்களைப் போல மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் சமயம் பார்த்து காலை வாரி விட்டுவிடும். விவாகரத்து பெறுவதற்காக இப்படி சுமத்தப்படும் வீண் பழியால் உறவுகளுக்குள் இருக்கும் கொஞ்சம் நஞ்ச அன்பும் பறிபோய் நிரந்தர எதிரிகளாக ஒருவரை ஒருவர் பார்க்க நேரிடும்.
வழக்கோ சட்டென்று முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடிக்கும். ஆண்டுக்கணக்கில் அலைய நேரிடும் நிலை வரும்போது வாழ்க்கையே வெறுத்துவிடும். இதற்கிடையே உறவினர்கள் மத்தியில் சலசலப்பு, சர்ச்சை, விவாதம், விசாரணை என்று நாலாபக்கமும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். விவாகரத்து தம்பதிகள் குற்றவாளிகளைப் போல சமூகத்தால் பார்க்கப்படுவார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் புரியாமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடும்.
கொலை, கொள்ளை, தீவிரவாதம், சமூகவிரோத செயல்கள் இப்படி எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோடு சேர்ந்து விவாகரத்து வழக்கு களும் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது ஜீவனாம்சம். ஜீவனாம்ச தொகை பெரிய அளவில் கோரப்படும். அதனால் விவாகரத்து வேண்டுமானால் பெரிய தொகையை தயார் செய்ய வேண்டியிருக்கும். அதிலிருந்து தப்பிக்க வரவு-செலவு, வருமானம்-சொத்துக்கள் பற்றி பொய் கணக்குகள் தயார் செய்ய சிலர் முற்படுவார்கள். அதற்காக வழக்கை இழுத்தடிப்பார்கள். அதுவரை இரு குடும்பங்களும் மன உளைச்சலோடு ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, பழி சொல்லிக்கொண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.
முன்பு பெண்கள் படிப்பறிவில்லாமல், வேலைக்கு போகாமல், யாரையாவது சார்ந்து இருந்தார்கள். அதனால் விவாகரத்திற்கு பின்பு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக கோர்ட்டு மூலம் பணம் பெறப்பட்டது. ஆனால் இப்போது பெண்கள் படித்து வேலைக்கு போய் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இப்போதும் அதே ஜீவனாம்சம் தரவேண்டி இருக்கிறதே என்று ஆண்கள் புலம்புகிறார்கள்.