துளசிதீர்த்தம் அமிர்தத்திற்கு நிகரானது. துளசிமாலையைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. இதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசிமணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளை குணப்படுத்துகிறது. வீடுகட்டும்போது வாயிற்படியில் மஞ்சளில் நனைத்த துணியில் துளசியைக் கட்டிவைக்கும் பழக்கம் இன்றும் உண்டு.
இடிதாங்கியைப்போன்ற சக்தி இதற்கு உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது. துளசிச் செடி பூவிட்டு வருகையில் கவனமாக பூவும், விதையும் முற்றிப் போவதற்கு முன் கொத்துக் கொத்தாக உள்ள பூவைக் கொய்து விட வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் நீண்ட நாட்களுக்கு துளசிச் செடி பட்டுப்போகாமல் பலன் தரும். பண்டைய காலத்தில் யுத்தத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் வெற்றி கிடைப்பதற்காககத் துளசி மாலையை அணிந்து சென்றுள்ளனர்.
வீர சாகசம் புரியும் வீரர்களுக்கு துளசிமாலையைப் பரிசாக அளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இறந்தோர் உடலை துளசியின் மீது படுக்க வைத்து துளசியால் மூடி வைத்தால் ஒருவார காலம் வரை கெடாமலும், துர்நாற்றம் வீசாமலும் பாதுகாக்கும். துளசி மனித குலத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான மூலிகை ஆகும்.