பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை "மச்சி… அப்ப ஒரு பீர் சொல்லேன்" என்பது தான்.
அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செய்வதால், அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. அதற்காக பெண்களுக்கு தொப்பை இல்லை என்றில்லை. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் குறைவே.
சரி, இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணிகள் என்னவென்று பார்ப்போம்.
பீர்
ஆம், பீர் குடித்தால் தொப்பை வரும். பெரும்பாலான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மேலும் பீர் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால், கலோரிகள் அதிகம் இருப்பதால், அதனால் தொப்பை வரக்கூடும். எனவே, தொப்பையை குறைக்க வேண்டுமெனில், முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
செய்யும் வேலை
தற்போது ஆண்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் கொழுப்புக்களாக மாறி, உடலில் தங்கி தொப்பையை உருவாக்குகின்றன.
உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை
உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள கூட ஆண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவில் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைமுறையை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓய்வு எடுக்கவே நேரம் இல்லாத போது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்.
அமைதியாய் ஆளைக் கொல்லும் பேய்
ஆம், தற்போது வேலைப்பளு அதிகம் இருப்பதால், பல ஆண்கள் மன அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகி, அதுவே தொப்பைக்கு வழிவகுக்கிறது.
நொறுக்குத்தீனிகள்
பெண்கள் மட்டும் தான் எந்நேரமும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் கூட ரகசியமாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால், ஆண்களுக்கு எப்படி தொப்பை வரும்?
சிப்ஸ், வடை, போண்டா
பெண்களை விட ஆண்கள் தான் டிவி பார்க்கும் போது எதையேனும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால், டிவி பார்க்கும் போது சிப்ஸ், வடை, போண்டா என்று சாப்பிட்டவாறே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால், இன்று ஒரு நாள் தானே, இதில் என்ன உள்ளது என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் சாக்குபோக்கு சொன்னால், தொப்பை வராமல் என்ன ஆகுமாம்.
பார்ட்டி
பொதுவாக ஆண்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் பங்கு கொள்வார்கள். மேலும் பார்ட்டி என்றால் அன்று அளவே இல்லாமல் குடிப்பதோடு, நன்கு வயிறு நிறைய அசைவ உணவுகளை உட்கொண்டு மட்டையாகிவிடுவார்கள். இப்படி வாரம் ஒருமுறை பார்ட்டியில் கலந்து கொண்டாலே போதும், தொப்பை பெரிதாவதற்கு…
தூக்கமின்மை
சில ஆண்கள் வேலை அதிகம் உள்ளது என்று, சரியாக சாப்பிடாமல், தூங்காமல், எந்நேரமும் வேலையின் சிந்தனையிலேயே இருப்பார்கள். இப்படி இருப்பதாலும், தொப்பை ஏற்படுகிறது.
இனிப்பான உணவுகள்
ஆண்களுக்கு இனிப்பு பொருட்களின் மீது ஆசை அதிகம் இருக்கும். அதிலும் ரவா லட்டு, அல்வா, ஜாங்கிரி, மைசூர் பாகு என்றால் அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இப்படி சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு காரணமாக உள்ளது.