காயமோ, புண்ணோ கண்ணுக்குத் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால், உடலின் உள்பகுதியில் ஏற்படுகிற காயங்கள், தொற்றுகள் பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. இத்தகைய உள் காயத்தைத் தெரிந்துகொள்வது எப்படி? நீரிழிவு சிறப்பு மருத்துவரான விஜய் பாபுவிடம் கேட்டோம்.
"நமது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் உள்காயங்களுக்கும் முக்கிய இடம் உண்டு. விபத்து போன்ற பெரிய காரணங்களால் மட்டுமில்லாமல் இடித்துக்கொள்ளுதல், கீழே விழுதல் போன்ற சின்னச் சின்ன காரணங்களாலும் உள்காயம் ஏற்படலாம். வியர்வை அதிகமாக வெளிப்படுகிற தலை, அக்குள், கால் விரல்கள், கணுக்கால் இணைப்பு போன்ற இடங்களில் சூட்டினால் கட்டி வரும்.
இந்த சுடு கட்டியும் ஒருவகையான உள்காயம்தான். தொற்று காரணமாக ஏற்படுகிற இது சருமத்தின் மேற்
பகுதியில் எரிச்சல், வீக்கம் மற்றும் நமைச்சலை உண்டாக்கும். இந்த சுடுகட்டிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. தானே மஞ்சள் தடவி குணப்படுத்த முயற்சி செய்வது ஆபத்தானது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சரியானது. சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறினால் Septicemia என்ற பிரச்னை உண்டாகி உடல் முழுவதும் பரவிவிடலாம். இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உண்டு.
உணர்வுத்திறன் குறைந்தவர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உள்ளுக்குள் வலிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதன் மூலம் உள்காயத்தைப் பொதுவாக உணர முடியும். நீரிழிவாளர்களுக்கு இந்த உணரும் திறன் குறைவாக இருக்கும். இதனால் சாதாரணமாக கண்ணுக்குத் தெரியும் காயத்தின் வலி உணர்வு கூட அவர்களுக்கு இருக்காது.
ஹீமோபிலியா என்ற ரத்தம் உறையாமை பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் இடித்துக் கொள்வது, புண்கள் ஏற்படுவது, வீங்குவது எல்லாம் உடனடியாகத் தெரியாது. தவிர, ஒருவருக்கு உள்காயம் ஏற்படுவதற்குத் தொற்றும் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதனால், உடலை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் உள்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்" என்கிறார்.