மாலையில் மொறுமொறுப்பாகவும், வித்தியாசமாகவும் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்து, வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பிரட் பஜ்ஜியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/2 கப் கடலை மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் சாட் மசாலா – 3/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பிரட் துண்டுகள் – 4-5 எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: முதலில் பிரட்டை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பஜ்ஜி ரெடி!!!