ரத்த அழுத்தம் கட்டுகுள் இருக்க…
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய, சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க தினமும் மாத்திரை எடுக்கவேண்டிய நிலையில் ஏராளமானோர் உள்ளனர். மாத்திரைக்குப் பதில், நம் கைகளிலேயே இதற்கான வைத்தியம் உண்டு. ரத்த அழுத்தப் பிரச்னையை இடம் தெரியாமல் நீக்க, இந்த நான்கு முத்திரைகள் கை கொடுக்கும். இதற்காக, மாத்திரையை எடுப்பதை நிறுத்திவிட்டு இதைச் செய்ய வேண்டாம். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அப்போது, மருத்துவரே மருந்துகள் அளவை சிறிது சிறிதாகக் குறைப்பார்.
சின் முத்திரை
ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். இது ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும். எந்த நேரத்திலும், எந்த நிலையிலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். மனம், வாயுவோடு சம்பந்தப்பட்டது. மனஅழுத்தம், மனச்சோர்வு சரியாகும். மனம் அலைபாய்வது கட்டுக்குள் வரும். மனம் அமைதி பெறும்.
இதய முத்திரை
நடுவிரல், மோதிர விரல், கட்டை விரல் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிரேகையைத் தொட்டிருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். இதய முத்திரையைச் செய்துவிட்டு 40 நிமிடங்கள் கழித்து, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்தால், ரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதைக் காண முடியும். இதயத்துக்குச் செல்கிற ரத்த ஓட்டம் சீராகும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க, பிரச்னை இருப்பவர்கள்கூட காலை மற்றும் இரவு 20 நிமிடங்கள் எனச் செய்துவர, இதய நோய்கள் அருகில் வராது.
ரத்த பித்த சமன் முத்திரை
நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும், 10 நிமிடங்கள் செய்தாலே போதும்.
ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையைப் பிடிக்கலாம்.
தூக்க முத்திரை
வலது கை: ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை: சுண்டு விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
சரியாகத் தூங்கவில்லை எனில், கட்டாயம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும். உணவு உண்டு, அரை மணி நேரம் கழித்து, படுத்த பிறகு இந்த முத்திரையைச் செய்யலாம். இந்த முத்திரையைச் செய்துகொண்டு இருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். நடு இரவில் எழுந்தாலோ, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களோ இந்த முத்திரையைத் தினமும் இரவு செய்துவர தூக்கம் கண்களைத் தழுவும்.