கோடைகாலம் என்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
வெயிலின் தாக்கத்தால் ஆசனவாய் எரிச்சல், கடுப்பு, மூலம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம், பனங்கற்கண்டு, பால். ஒரு பாத்திரத்தில் சிறிது பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும்.
இதை நீர் விட்டு கொதிக்க வைக்கவும். பனங்கற்கண்டு கரைந்தவுடன் வடிகட்டி எடுக்கவும்.
இதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்த்து கலக்கவும். இதில், பால் சேர்த்து இரவு உறங்கப்போகும் முன்பு ஒரு டம்ளர் அளவுக்கு குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்.
கோடைகாலத்தில் ஏற்படும் ஆசனவாய் வெடிப்பு, எரிச்சல் வராமல் தடுக்கலாம்.
சோர்வை போக்கும். வெயிலால் உடலில் நீர்வற்றி போவதால் சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல் இருக்கும். இதற்கு வாழைப்பழம் மருந்தாகிறது.
கறிவேப்பிலையை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.
சுமார் 30 கறிவேப்பலையை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.
நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், வலி குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும். இழந்துபோன நீர்ச்சத்தை ஈடுகட்டுகிறது.
உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். சோர்வை போக்கும் தன்மை கொண்டது.
கறிவேப்பிலை உன்னதமான மருத்துவ குணங்கள் உடையது. இதில் இரும்புச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்து கணிசமான அளவில் இருக்கிறது.
குப்பைமேனி, வேப்பிலையை பயன்படுத்தி ஆசனவாயில் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் குப்பை மேனி இலைகள் மற்றும் வேப்பிலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும்.
இதில், ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணிந்து போகும். மலச்சிக்கல் மறைந்து போகும்.
இதை வடிகட்டி மேல் பற்றாக போடும்போது ஆசனவாய் வெடிப்பு, எரிச்சல், வலி சரியாகும்.
உடலில் உஷ்ணம் இல்லாமல் செய்வது வேப்பிலை. உடலை மேன்மை படுத்தும் தன்மை கொண்டது குப்பை மேனி.
கோடைகாலத்தில் ஏற்படும் ஆசனவாய் வெடிப்பு, தொற்று ஆகியவற்றை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும்.
இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஆசனவாயில் மேல்பூச்சாக போடும்போது வெடிப்பு விரைவில் குணமாகும்.
ஆசனவாயில் ஏற்படும் தொற்று விலகும்.
கால்களில் ஏற்படும் வெடிப்புக்கும் இதை பயன்படுத்தலாம்.