தடுக்கி விழுந்தால் ஒரு அழகுக் குறிப்பு என்று, எக்கச்சக்க அழகுக் குறிப்புக்கள் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால் அவை அனைத்துமே உண்மையானவைதானா? பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதன் பின் பரிந்துரைக்கப்பட்டனவா என்று எவருக்குமே தெரியாது.
அழகுபடுத்தலில் பெண்கள் விடக்கூடிய தவறுகள் சில இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டையாவது நீங்கள் நிச்சயமாகச் செய்பவராகத்தான் இருப்பீர்கள்.
எனவே, கவனமாக இந்தக் குறிப்புக்களை வாசித்துப் பாருங்கள்.
அதேநேரம், அந்தத் தவறுகளைத் தவிர்க்க அல்லது அவற்றைச் சரிக்கட்டுவதற்கு என்ன செய்வது என்றும் தரப்பட்டிருக்கிறது.
எனவே, உங்களிடம் தவறுகள் ஏதேனும் இருந்தால் திருத்திக்கொள்ள உங்களுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.
1. ஒப்பனைக்கு முன் பலரும் தமது சருமத்தைத் தயார்செய்வதில்லை. இதனால், இட்டுக்கொள்ளும் ஒப்பனையானது காய்ந்த சருமத்தில் சரியாகப் படராது.
அப்படியே இட்டுக்கொண்டாலும் ஒப்பனை காய்ந்து வெடித்துவிடும்.
நீங்கள் செய்யவேண்டியது, ஒப்பனைக்கு முன் உங்கள் சருமத்தைச் சற்று ஈரலிப்பாக வைத்துக்கொள்வதுதான்.
முகத்திலும் கழுத்திலும், சுத்தமான கைகளால் மொய்ஸ்சரைசரைத் தடவி ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஐந்து நிமிடங்களாவது பொறுத்திருங்கள்.
அப்போதுதான் நீங்கள் இட்டுக்கொள்ளும் ஒப்பனையானது சருமத்துக்குள் ஊடுருவிச் சென்று தகுந்த பலனைத் தரும்.
2. சருமத்துக்குப் பொருந்தாத நிறத்தில் பவுண்டேஷனைத் தடவுவது. இதனால், எவ்வளவுதான் நீங்கள் தடவினாலும் கழுத்தும் முகமும் வெவ்வேறு நிறங்களிலேயே காட்சியளிக்கும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் சருமத்துக்கு மிகப் பொருத்தமான நிறமுள்ள பவுண்டேஷனைத் தெரிவுசெய்வதே! முகம் முழுவதும் தடவிக்கொள்வதற்கு முன், கழுத்தில் சிறிது தடவியபின் ஐந்து நிமிடங்கள் வரை காத்திருங்கள்
பின்னர் உங்கள் சருமத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும், அதை சூரிய ஒளியிலும் விளக்கொளியிலும் வைத்தும் பார்க்கலாம்.
இதனால், உங்களது சருமத்துக்குப் பொருத்தமான நிறம் எது என்பதைத் துல்லியமாக அறிந்து, அதையே தொடர்ந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு: அதேவேளை கோடை காலத்துக்கும், குளிர்காலத்துக்கும் வெவ்வேறு பவுண்டேஷன்கள் தேவைப்படும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
எனவே, ஒவ்வொரு பருவத்தின் போதும் சரியான பவுண்டேஷனைத் தெரிவு செய்யுங்கள்.
3. சிலர் அவசரம் கருதியோ அல்லது சோம்பல் தன்மையாலோ, பிரஷ்ஷைக் கொண்டு பவுண்டேஷனை இட்டுக்கொள்வதில்லை.
பதிலாக, தமது கைகளைக் கொண்டே இட்டுக்கொள்வர். இதனால் என்ன நடக்கும் தெரியுமா? நீங்கள் எதையெல்லாம் பவுண்டேஷன் கொண்டு மறைக்க விரும்புகிறீர்களோ, அவையெல்லாம் மேலும் ‘பளிச்’சென்று தெரியவரும்.
ஒருபோதும் கைகளால் பவுண்டேஷன் இட்டுக்கொள்ளாதீர்கள். எவ்வளவு அவசரம் என்றாலும் ஸ்பொஞ்ச் மூலமாகவே இட்டுக்கொள்ளுங்கள். அல்லது விரல்களை மட்டும் பாவித்து இட்டுக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால், முகம் எங்கும் சம அளவில் பவுண்டேஷன் பரவுவதோடு, சிறு சிறு திட்டுக்கள் தோன்றா!
4. பவுண்டேஷன் சரியாக உலர முன் பௌடர் இட்டுக்கொள்வது, பெண்கள் பலரும் செய்யக்கூடிய இன்னொரு தவறு. இப்படிச் செய்வதால், ஈரம் அதிகமாக இருக்கும் இடத்தில் பவுடர் அதிகமாகவும், குறைவாக இருக்கும் இடத்தில் குறைவாகவும் ஈர்த்துக்கொள்ளப்படுவதால், முகம் முழுதும் ஒரே சீரான தோற்றம் கிடைக்காது.
எனவே, பவுண்டேஷன் இட்டுக்கொண்டதும் ஓரிரு நிமிடங்கள் பொறுத்திருங்கள். அதற்குள் பவுண்டேன் காய்ந்து விடும். பிறகு பவுடர் இட்டுக்கொள்ளலாம்.
5. ‘கொன்டூர்’ என்று சொல்லப்படும் ‘டச்சப்’ வேலையைச் செய்வதற்குப் பலருக்கும் தெரிவதில்லை.
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக (அல்லது அதிர்ச்சி தரும் விதமாக!) எல்லோரும் இந்த டச்சப்பை செய்துகொள்கிறார்கள். தெரியாமல் செய்யப்படும் டச்சப்களால் முகம் விகாரமாகத் தோற்றமளிக்கப் பெரிதும் வாய்ப்புகள் உண்டு.
டச்சப் பவுடர் என்று தனியாக விற்கப்படுகிறது. அதை வாங்கிக்கொள்ளுங்கள். அதைப் பூசுவதற்கு என்ற தனியாக ஒரு ப்ரஷ்ஷும் விற்கப்படுகிறது.
அதையும் வாங்கி, ப்ரஷ்ஷினால், நாடியின் கீழ்ப் பகுதியில் இருந்து மேல்நோக்கித் தடவுங்கள். அதன் பின், ‘ப்ரிஸ்ட்டில்ஸ்’ அதிகமுள்ள தூரிகை மூலம், சரிசம விகிதத்தில் முகமெங்கும் இட்டுக்கொள்ளவும்.
6. கன்னச் சிவப்பு எனப்படும் ப்ளஷ் எனப்படும் மெல்லிய சிவப்பு நிறத் திட்டை ஏறக்குறை எல்லாப் பெண்களும் விரும்புவர்.
ஆனால், அதை மிகச் சரியாக கன்னத்தின் எந்தப் பகுதியில் இட்ட்டுக்கொள்வது என்பது அனைவருக்கும் தெரிந்திராது. இப்படித் தவறான இடத்தில் கன்னச் சிவப்பை இட்டுக்கொள்வதால், அது ஏதோ சருமத்தில் பிரச்சினை என்று தான் பார்ப்பவர்கள் நினைப்பார்கள்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், கன்னச் சிவப்பை இட்டுக்கொள்ளும் முன் ஒரு முறை சிரித்துப் பாருங்கள். அப்போது கன்னத்தின் எந்தப் பாகம் சிவக்கிறதோ, அதே பாகத்தில் சிவப்பைத் தடவிக்கொள்ளுங்கள்.
7. சிலர், டச்சப் பவுடரால், மூக்கின் இரு பகுதியிலும் மெல்லிய ஒரு கோடு வரைந்துகொள்வார்கள். இதனால், மூக்கு அச்சில் வார்த்ததுபோல் தனித்துத் தெரியும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இப்படிச் செய்வதால், உங்கள் மூக்கின் உண்மையான நீளமோ, அகலமோ இன்னும் அதிகமாகத் தெரியும் என்பதே உண்மை!
கோடு ஒன்றை வரைந்துகொள்வதற்குப் பதிலாக, மெல்லிய தூரிகையால், டச்சப் பவுடரையே, கன்னத்தில் தடவியிருப்பதை விட ஓரிரு முறை மூக்கின் இரு புறமும் தடவுங்கள். அதன் மேல், அதே டச்சப் பவுடரினால் மெலிதாகத் தடவி விடவும். இதனால் அந்தப் பகுதி மட்டும் தனித்துத் தெரியாது. அதேநேரம், உங்கள் மூக்கும் எடுப்பாகத் தெரியும்.
8. மினுமினுக்கும் ஐஷெடோவைப் பூசும் பலரது கண் இமைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, அவற்றின் இயல்பான அளவை விடச் சற்று வீங்கியது போல் தெரியும்.
மெற் நியூட்ரல் ஷேட்களை கண் இமைகளில் முதலில் பூசிக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் கண்கள் சற்றுப் பெரிதாகக் காட்சிதரும்.