ஸ்பா என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
புத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டிலேயே செய்யலாம்
ஸ்பா என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி உடல் முழுவதும் ரத்தம் பாயச் செய்கிறது. இதன் காரணமாக உடலில் பொலிவு, அழகு கூடும். சருமம் பளபளக்கும். அழுக்குகள் நீங்கி, உடல் அசதி, வலி ஆகியவை நீங்கி புத்துணர்வோடு வலம் வருவீர்கள்.
spa at home with natural
வீட்டிலேயே நீங்கள் பார்லரில் கிடைக்கும் அனுபவம் போல் ஸ்பாவை மேற்கொள்ளலாம்.
உடலிலிருக்கும் நச்சுக்களை நீக்க சிறந்த வழி என்னவென்றால் ஸ்பா செய்வதுதான். இதற்கு தேவையானவற்றை முதலில் முன்னேற்பாடு செய்து கொள்ளுங்கள். ஸ்ட்ராபெர்ரி, ரோஜா இதழ்கள், டர்க்கி டவல், ஒயின் அல்லது நுரை தரும் ஏதாவது வாசனை சோப், இதமான மெல்லிசை என ஸ்பாவிற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அரோமா எண்ணெய் :
பாதாம் எண்ணெய் – 50 மி.லி.
ஆலிவ் எண்ணெய் – 50 மி.லி.
சந்தன எண்ணெய் – 4 துளிகள்
ரோஜா எண்ணெய் – 4 துளிகள்.
மேலே கூறியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அடுத்தது இயற்கையான ஸ்க்ரப் :
வெள்ளை சர்க்கரை – 1 கப்
அரிசி தவிட்டு எண்ணெய் – 50 மி.லி.
ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி
மல்லிகை எண்ணெய் – 3 துளிகள்
சந்தன எண்ணெய் – 3 துளிகள்.
மேலே கூறிய பொருட்களை எல்லாம் கலந்து ஒரு பாட்டிலில் தயார் செய்து கொள்ளுங்கள்.
முதலில் அரோமா எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக அசதி, வலியை தரும் பகுதிகளான கழுத்து, முதுகு, தோள்பட்டைகளில் அழுத்தமாக தேய்த்து, மசாஜ் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது இந்த மசாஜை செய்ய வேண்டும்.
இதன் வாசனையும் குணங்களும் உங்களிடன் இருக்கும் இறுக்கத்தை போக்கச் செய்யும். பின்னர் இளஞ்சூட்டுள்ள நீரில் ஒரு துண்டினை நனைத்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஸ்டீம் பாத் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளலாம். இவை எண்ணெயை சரும துவாரங்களின் வழியாக உள்ளே போகச் செய்கிறது. 15 நிமிடங்கள் கழித்து நீங்கள் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஸ்க்ரப்பினால் உடல் முழுவதும் தேயுங்கள்.
வட்ட வடிவமாக கீழிருந்து மேலாக தேய்க்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அழுக்குகள் நச்சுக்கள் வெளியேறி சருமம் மென்மையாக மாறிவிடும். உங்களிடம் டப் இருந்ததென்றால், அதில் வெதுவெதுப்பான சூடுள்ள நீரில் அரோமா எண்ணெயை கலந்து, ரோஜா இதழ், சாமந்தி இதழ், மசித்த ஸ்ட்ராபெர்ரி, கடல் உப்பு, ஆகியவற்றை கலந்து, நுரையை உண்டாக்கும் லிக்விட் சோப்பினையும் சேர்த்து கலக்குங்கள்.
பின்னர் மெல்லிய இசையை கேட்டுக் கொண்டே டப்பில் 30 நிமிடங்கள் அனுபவியுங்கள். இவை உடலுக்கு அபாரமான புத்துணர்ச்சி தரும். டப் இல்லையென்றால் இளஞ்சூட்டில் ஷவரில் குளித்தாலும், இதே போன்ற புத்துணர்ச்சி கிடைக்கும்.