29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
p36
மருத்துவ குறிப்பு

முடி வேண்டுமா… உயிர் வேண்டுமா?

இன்றைய இளைஞர்களில் பலருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, ‘வழுக்கை’ பிரச்னை. இளம் வயதிலேயே முடி உதிர ஆரம்பிப்பதால், பலருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. முடி உதிர்தல், வழுக்கை ஆகியவற்றைத் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்வதற்கு இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியொரு முயற்சியில் இறங்கிய ஓர் இளைஞர் அதுவும், எம்.பி.பி.எஸ் படித்த ஒருவர், தனது உயிரையே பறிகொடுத்த சோகச் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

”என் மகன் சந்தோஷ்குமாருக்கு மெரிட்ல எம்.பி.பி.எஸ் சீட் கிடைச்சது. பயிற்சி மருத்துவரா இருந்தான். எங்க ஊர்ல கிளினிக் ஆரம்பிக்கணும்னு கனவுல இருந்தான். அவனுக்குத் திடீர்னு தலைமுடி உதிர ஆரம்பிச்சது. அதனால, ரொம்பக் கவலையில இருந்தான். அடுத்த வருஷம் நடக்கப்போற பட்டமளிப்பு விழாவுல கோல்டு மெடல் வாங்க இருந்தான். அதுக்குள்ள, வழுக்கைப் பிரச்னையை எப்படியாவது சரிசெய்யணும்னு சொன்னான். அதுவே அவனுக்கு எமனா மாறிடிச்சு” என்று கதறுகிறார் ஆரணியில் வசிக்கும் சந்தோஷ்குமாரின் தாயார் ஜோஸ்பின்.
p36
நடந்தது என்ன?

”முடியை நட்டு வழுக்கையை சரிசெய்யணும்னு என் மகன் சொன்னான். அதுக்காக, சென்னை நுங்கம்பாக்கத்துல ஏ.ஆர்.ஹெச்.டி-னு ஒரு பியூட்டி பார்லருக்கு மே 13-ம் தேதி போனான். சில பரிசோதனைகள் செய்யணும்னு மறுநாள் வரச்சொல்லி இருக்காங்க. துணைக்கு வருமாறு எனக்கு போன் பண்ணினான். உடனே நான் சென்னைக்குப் போனேன். மே 15-ம் தேதி காலையில் 58 ஆயிரம் ரூபாய் கட்டினோம். மயக்க மருந்து கொடுத்துச் சிகிச்சையை ஆரம்பிச்சாங்க. தலையில இடதுபக்கம் முடியை நட்டாங்க. அப்போ, நல்லாத்தான் இருந்தான். அப்புறம், சாப்பிட்டப் பிறகு வலது பக்கம் முடி நடுறதுக்காக மயக்க மருந்து கொடுத்தாங்க. ராத்திரி 7.30 மணிக்கு சந்தோஷ்குமார் திடீர்னு வாந்தி எடுத்தான். பிறகு, மயக்கமாயிட்டான். உடனே அவனை, நுங்கம்பாக்கத்துல ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். முதலுதவி செஞ்சு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்தப்புறம், சந்தோஷ்குமாரோட கையெல்லாம் ப்ளு கலர்ல மாற ஆரம்பிச்சது. பதறிப்போய் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில சேர்த்தோம். அங்கு சிகிச்சை கொடுத்தாங்க. ஆனாலும் அது பலன் தரல. இறந்துபோயிட்டான். அவனோட தலை, முகம் எல்லாம் பச்சை கலரா மாறிப்போச்சு” என அழுதவாறு நடந்ததை விவரித்தார் ஜோஸ்பின்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அழகு நிலையம் மீது ஜோஸ்பின் புகார் அளித்தார். அவரது புகாரை வாங்க மறுத்து வேலூரில் புகார் கொடுக்குமாறு போலீஸார் அலைக்கழித்துள்ளனர். பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஜோஸ்பின் புகார் அளித்த பிறகே, விவகாரம் பரபரப்பானது.

இந்த விவகாரம் குறித்து, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்திலிடம் கேட்டோம். ”சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்த மயக்கவியல் மருத்துவர் ஹரிபிரசாத், கடைசிவரை அவர் அருகில் இருக்கவில்லை. டாக்டர் வனித் சீனாவில் மருத்துவம் படித்தவர். எம்.டி. படித்த அவர், அறுவை சிகிச்சை அளிக்க தகுதி கிடையாது. ஆனால், அவர் தான் இந்த சிகிச்சையை அளித்துள்ளார். எனவே, இது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். முடி வெட்டுவது, அழகுபடுத்துவது ஆகியவற்றுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லருக்கு அனுமதி பெற்றுள்ளனர். முடி நடும் சிகிச்சைக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. தற்போது, அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றார்.

p36a

அனுமதியின்றி நடுறாங்க!

முடி உதிர்தல், வழுக்கைத் தலை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குறிவைத்து ஊர்கள்தோறும் அழகு நிலையங்கள் புற்றீசல்போல முளைத்துள்ளன. இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பதுடன், கண்ட கண்ட எண்ணெய்கள், க்ரீம்களைத் தேய்த்து இருக்கும் முடியையும் பறிக்கொடுத்துவிட்டு பலர் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறார்கள். முடி மாற்றுச் சிகிச்சை அளிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் டெர்மடாலஜி பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அழகு நிலையங்களில் அனுமதி இல்லாமல் முடி நடும் சிகிச்சையை அளிக்கிறார்கள்.

சந்தோஷ்குமார் மரணத்துக்குக் காரணமான ஏ.ஆர்.ஹெச்.டி மையம், புனே நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 11 இடங்களில் கிளைகள் உள்ளன. தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிளை உள்ளது. எம்.பி.பி.எஸ் முடித்த டாக்டர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளித்து, அவர்கள் இந்த மையங்களில் வேலையில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட அழகு மையங்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அதுபோன்ற அழகு நிலையங்களுக்கு, ‘மருத்துவர்கள் யாரும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனரா?’ என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூ.50,000 முதல் ரூ.1,50,000!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் காஸ்மட்டிக் அறுவைச்சிகிச்சை நிபுணரான டாக்டர் செல்வம், ”பெரும்பாலும் தலையின் முன்பக்கத்திலும், உச்சியிலும் வழுக்கை விழும். இதற்கு, முடி நடும் சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு. மனிதனின் பின்பக்கத் தலையில் உள்ள முடிகளுக்கு நீண்ட ஆயுள் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இதனால், பின்பக்கத் தலையில் இருந்து வேரோடும், தோலாடும் சேர்த்து முடியை எடுத்து, வழுக்கை விழுந்த பகுதியில் அறுவைச்சிகிச்சை மூலம் அந்த முடிகளை நடுவார்கள். இந்த முடிகள் வளரவும் செய்யும். முடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கென அனுமதி பெற்ற மருத்துவமனைகளிலேயே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, 5-6 மணி நேரம் பிடிக்கும். மயக்க மருந்து கொடுத்துச் செய்வது சிரமம். இதனால், வலியை மறக்கச் செய்யும் ஊசியைச் செலுத்தி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்” என்றார்.

புகார் கொடுப்பதில்லை!

முடி நடும் பிரச்னைக்காகச் சிகிச்சை பெறுபவர்கள், சிகிச்சையில் பாதிப்பு ஏற்பட்டால் அதுபற்றி அவர்கள் வெளியே சொல்வதில்லை. அதை ஒரு கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இந்த விவகாரமும்கூட, சந்தோஷ்குமாரின் தாயார் புகார் செய்ய முன்வந்ததால் தான் வெளியே வந்துள்ளது.

சந்தோஷ்குமாரின் சிகிச்சை மேற்கொண்ட அதே மையத்தில் சிகிச்சை எடுத்து பாதிக்கப்பட்ட ஒருவர், தனது அனுபவத்தை இணையத்தில் எழுதியிருக்கிறார். அதில், ”முடி நடுதலுக்கான மிக மோசமான இடங்களில் இதுவும் ஒன்று. கட்டணம் குறைவாக இருந்தது என்பதைப் பார்த்து, வலையில் விழுந்துவிட்டேன். போதிய அனுபவம் இல்லாத மருத்துவர்கள் தங்களை மலிவானவர்கள் என்று மார்க்கெட் செய்துகொள்கிறார்கள். கொடூரமான சிகிச்சைக்குப் பிறகு இவற்றை நான் புரிந்துகொண்டேன். அவர்கள் பணத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது. என் இயற்கையான முகமும், தோற்றமும் இனிமேல் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

p36d

நடவடிக்கை பாயுமா?

வழுக்கைத் தலையில் முடி நடும் மையங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. இப்படி விளம்பரம் செய்வதே சட்டப்படி தவறு. டாக்டர்கள் தங்களை ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்று விளம்பரம் செய்துகொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், அழகு நிலையம் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதும் தவறு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிரபலமான ஓர்அழகு நிலையத்துடன் தனியார் கிளினிக்கின் பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சிகிச்சை அளித்த தகவல் மருத்துவக் கவுன்சிலுக்கு தெரியவந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தோஷ்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இருவரும், மருத்துவக் கவுன்சிலுக்கு தங்களது விளக்கங்களை அனுப்பியுள்ளனர்.

”சந்தோஷ்குமார் மரணத்துக்குப் பிறகு, இதுபோன்ற கிளினிக்கை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சிகிச்சையால் இறந்த பயிற்சி டாக்டர் சந்தோஷ்குமார், வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். முடி தொடர்பான போலியான விளம்பரங்களை வெளியிடுவது தடை செய்ய வேண்டும்” என்றார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

எது அழகு?

முடி உதிர்தல் மற்றும் வழுக்கை தொடர்பான உளவியல் பிரச்னை குறித்து உளவியல் நிபுணர் அபிலாஷாவிடம் கேட்டோம்.

”வழுக்கையில் முடி நடும் மோகம் வெளிநாடுகளில் குறைந்துவருகிறது. ஆனால் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இங்கு, வழுக்கைத் தலையை ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்வதற்கான சமூக அழுத்தம் அதிகமாக இருக்கிறது. நடுத்தர வயதினரிடம் பொதுவாக இருந்தாலும் இப்போது, இளைஞர்களிடம் அதிகமாகி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கும்கூட இப்போது வழுக்கை விழுகிறது. மன அழுத்தம், மாசுப்பட்ட சுற்றுச்சூழல், மாசுப்பட்ட தண்ணீர், மரபணு போன்ற காரணங்களே முடி உதிர்தலுக்கான முக்கியமானவை. ஒருவருக்கு வழுக்கை விழுந்தால், நிச்சயமாக அவருக்கு அது தாழ்வுமனப்பான்மையைக் கொடுக்கும். தன் பெர்சனாலிட்டியை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற தயக்கமும் இருக்கும். ஏன் இப்படி ஆனது என்று பதில் தெரியாதவர்களுக்குக் கோபமும் இருக்கும். இது ஓர் இயற்கையான பிரச்னை என்று உணர்ந்துகொண்டாலோ, இதில் பெரிதாக மாற்றம் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. இதை மாற்றியே ஆகவேண்டும் என்கிறபோதுதான் பிரச்னை வருகிறது. ஏற்றுக்கொள்ளுதல் என்பது முக்கியம். மருத்துவம் படித்த ஒருவரே இவ்வளவு தூரம் போய் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றால், அந்த அளவுக்கு சமூக அழுத்தம் அதிகமாக இருக்கிறது. முடிதான் நம் அழகை நிர்ணயிக்கிறது என்ற எண்ணத்தை நம் மனதில் இருந்து தூக்கியெறிய வேண்டும். நம்முடைய குணம், நாம் நடந்துகொள்ளும் முறை, நாம் கற்கும் கல்வி போன்றவைதான் நமக்கு அழகு” என்றார் அபிலாஷா.

ஏ.ஹெச்.ஆர்.டி. அழகு நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட 2 டாக்டர்களின் கருத்துக்களை அறிய நேரில் சென்றோம். ஆனால், அவர்களின் கருத்துக்களைப் பெற முடியவில்லை.

– ஆ.பழனியப்பன், எஸ்.மகேஷ், அ.அச்சணந்தி
படம்: என்.ஜி.மணிகண்டன்

தலைக்கு ஒரு லட்சம்!

கரோட்டின் என்கிற புரதத்தால் ஆன புரத இழைதான் முடி. ஒருவரின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும். ஒரு முடியானது, தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கையானது.

ஸ்டான்லியில் ‘காஸ்மெட்டலாஜி’!

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் ‘காஸ்மெட்டலாஜி’ எனப்படும் அழகு கலைக்கான சிறப்புத் துறை இருப்பது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்தான். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளில் 250 பேருக்கு முடிநடும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

தொடரும் ‘விக்’ திருட்டு!

‘வந்தா மலை… வராட்டா மயிர்’ என்று சொல்லப்படுவதுபோல, முடி ஒன்றும் லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல. அதனால்தான், ‘விக்’ எனப்படும் டோப்பா முடி திருடப்படும் சம்பவங்களும் நம் நாட்டில் நடக்கின்றன. சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு இது. சென்னை கொடுங்கையூரில் விக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விக் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரவில் ஒரு நாள் இந்த நிறுவனத்தின் கூரையைப் பிரித்து முகமூடி அணிந்த மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கிவிட்டு ரூ.7 லட்சம் மதிப்புள்ள விக்குகளை திருடிச் சென்றனர். இதேபோல கடந்த ஆண்டு, கொடுங்கையூரில் விக் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள விக்குகள் திருடப்பட்டன. சென்னையில் மட்டுமே 30-க்கும் அதிகமான தலைமுடி டோப்பா தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முடியைப் பாதுகாக்க..!

தலைமுடியைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். சருமமும், முடியும் வறண்டுபோகாமல் இருக்க, எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஷாம்புவை தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, சீயக்காயைப் பயன்படுத்துவது நல்லது. வெயிலில் அதிகமாக அலைவதைத் தவிர்க்க வேண்டும். கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. முடியை உலர்த்த ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான சத்துக்கள் கிடைக்கும்.

மறைக்கப்பட்ட வழுக்கை!

காஷ்மீரில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு 2009-ல் திருமணம் நடந்தது. குளுகுளு மாநிலத்தில் குடியேறிய அந்த இளம் தம்பதியின் வாழ்க்கையில் குளுமைக்குப் பதில் புயல்தான் வீசியது. திருமணமாகி இரண்டு மாதங்களில் அவரது மனைவி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதில், தன் ஐ.பி.எஸ் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை மனைவி சொல்லி இருந்தார். அவற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு புகார் என்ன என்றால், தன் கணவர் வழுக்கைத் தலையை மறைத்து ‘விக்’ வைத்து தன்னை மோசம் செய்துவிட்டார் என்பதுதான்.

ஒரு கிலோ ரூ.25,000!

முடி என்பது கோடிகள் புரளும் பிஸினஸ். இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தலைமுடி கிடைக்கும் இடம் திருப்பதி. அங்கு கடந்த ஆண்டு பெண்களின் ஒரு கிலோ தலைமுடி ரூ.25,561 (முதல் ரகம்), ரூ.20,023 (2-வது ரகம்), ரூ.6,502 (3-வது ரகம்) என ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan

கடுகு எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

nathan

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

nathan

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும் முசுமுசுக்கை கொடிகள்!! பார்த்தா யூஸ் பண்ணுங்க!!

nathan

இதோ எளிய நிவாரணம்! சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன?

nathan

காலையில் காபி குடித்தால் தான் மலம் வருகிறதா? அதற்கான காரணம் இவை தான்!!!

nathan

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது.

nathan