25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ht44131
மருத்துவ குறிப்பு

கழுத்துவலியை தடுப்பது எப்படி?

நோய் அரங்கம் டாக்டர் கு. கணேசன்

மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி. ‘செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்று மருத்துவர்கள் இதை அழைக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வருகிற நோயாக இருந்தது. இப்போதோ இது 20 வயது இளைஞனுக்கும் வருகிறது; யுவதிகளுக்கும் வருகிறது.

காரணங்கள்?

கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி. அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்கு அடித்தளம் அமைக்கும்.முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்து போவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களால் கழுத்துவலி வருவது அடுத்த வகை.

பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத்தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இவை தேயத் தொடங்கிவிடுகின்றன. காரணம், இவர்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டது. கம்ப்யூட்டர் முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதுபோல் தொடர்ந்து பல மணி நேரங்களுக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. பல தலையணைகளைத் தலைக்கு அடுக்கி வைத்து உறங்குவது, வேலைக்குச் செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்துவலிக்குப் பாதை அமைப்பவைதான்.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியை சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும்.

உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்கு கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். முன்பெல்லாம் இது 50 வயதில் நிகழும். ஆனால், உடலுழைப்பு இல்லாத இன்றைய இளைய சமுதாயத்துக்கு 20 வயதில் இந்த இறுக்கம் ஏற்பட்டுவிடுவதால் இப்போது இந்த நோய் இளைஞர்களுக்கு வருகிற நோயாக மாறிவிட்டது.தொண்டையில் உள்ள சுரப்பிகளில் ஏதாவது ஒரு தொற்று ஏற்பட்டு அங்கு நெறிகட்டிக் கொண்டால் அந்த வலி கழுத்தில் உணரப்படும். காய்ச்சலும் இருந்து கழுத்தை அசைக்க முடியாமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்ததுபோல் இருந்தால், இந்தக் காரணம் இருக்க அதிக வாய்ப்பு உண்டு.

இவை தவிர கழுத்தில் அடிபடுவது, விளையாடும்போது கழுத்தெலும்பு ஜவ்வு விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வரும். கழுத்துவலி வருவதற்கு மற்றொரு காரணம் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில்தான் வலிக்கும் என்று பொதுவாக எண்ணுவார்கள். அப்படியில்லை. நெஞ்சு வலியோடு அது கழுத்துக்கும் பரவும். அதேவேளையில் கழுத்தில் வலி வந்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். கழுத்தில் வலி ஏற்படும்போது கழுத்தைப் பல்வேறு திசைகளில் அசைத்துப் பாருங்கள். அந்த வலி அதிகமானாலோ, குறைந்தாலோ, கழுத்தின் இறுக்கம் குறைந்தாலோ அது மாரடைப்பு இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

அறிகுறிகள்?

‘செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்கு கை மற்றும் விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைச்சுற்றலும் ஏற்படும்.

என்ன பரிசோதனை?

கழுத்தை எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள கழுத்து வலியை சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப் படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ‘ட்ராக்சன்’ போட்டுக்கொள்வது, பிசியோதெரபி நல்ல பலன் தரும்.

தடுப்பது எப்படி?

1. எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.
2. பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்த வரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள்.
3. பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.
4. ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.
5. கம்ப்யூட்டரில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.
6. கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக படிக்கும்போதும், கம்ப்யூட்டரைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.
7. தலையை குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் – தையல் வேலை செய்கிறவர்கள்.
8.மிருதுவான தலையணையை பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.
9. அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.
10.படுக்கும்போது சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள்.
11.புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், முட்டை, இறைச்சி, மீன், காய்கறி, பழங்களை உட்கொள்ளுங்கள்.
12.பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
13.நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைபிடியுங்கள்.
14. கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகா
சனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது.
15. மோசமான சாலைகளில் மற்றும் ஸ்பீடு பிரேக்கர்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். கழுத்தில் சுளுக்குதிடீரென்று கழுத்தைத் திருப்புதல், அதிர்வு தரும் அசைவுகள், அதிக சுமையைத் தூக்குதல், வேகமாகத் தலையை அசைத்தல் மற்றும் தலையைத் திருப்புதல் போன்ற பல காரணங்களால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும்.

அப்போது சுளுக்கு எடுப்பது பலருக்கும் பழக்கம். இது தவறு. இப்படி சுளுக்கு எடுப்பதில் ஆபத்து உள்ளது. காரணம், கழுத்தெலும்பில் உள்ள ஜவ்வு விலகியிருந்து அதன் காரணமாக கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருந்தால், சுளுக்கு எடுப்பதன் மூலம் நோய் கடுமையாகிவிடும். பதிலாக, கழுத்துக்கு முழுமையாக ஓய்வு தந்தாலே சுளுக்கு குணமாகிவிடும். அத்துடன் வலிநிவாரணி களிம்புகளைத் தடவி லேசாக மசாஜ் செய்யலாம். வலி நிவாரணி மாத்திரை மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தலாம். பிசியோதெரபி செய்யலாம். ht44131

Related posts

சூப்பர் டிப்ஸ்! பெண்களே வெள்ளைபடுதல் குணமாக இதோ அருமையான பாட்டி வைத்தியம்..!

nathan

நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

nathan

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! சிறுநீரக தொற்று பாதிப்பா? இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

10 நாட்களில் குடலில் உள்ள நச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்……..

nathan

வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள்!!!

nathan

இரும்பு சத்து மாத்திரை டி.என்.ஏ.வை பாதிக்கும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

nathan