ஃபேஷன் துறையில் இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியாவின் ஃபேஷன் ராணி, புகழ்பெற்ற பார்பி பொம்மைக்கு உடை அலங்காரம் அமைத்தவர். பாரீசில் ஃபேஷன் ஷோ நடத்திய முதல் இந்திய ஃபேஷன் டிசைனர். பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமல்ல பில் கிளின்டன், நிகோல் கிட்மேன், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்… போன்ற பிரபலங்களுக்கும் உடை அமைத்தவர். 2007ல் கல்பனா சாவ்லா விருது பெற்றவர்.
ஃபேஷன் துறைக்கு இவர் ஆற்றிய பணியை பாராட்டி பிரான்ஸ் அரசு அவர்கள் நாட்டின் மிக உயர்ந்த விருதான சிவிலியன் விருதை இவருக்கு அளித்து கவுரவித்துள்ளது. 25 வருடமாக ஃபேஷன் துறையில் தனக்கென்று ஒரு இடம் பதித்துள்ள ரிட்டு பெரி, தன்னுடைய இத்தனை ஆண்டு பயணத்தை ‘ஃபயர் ஆஃப் எ ரெஸ்ட்லெஸ் மைண்ட்’ மற்றும் ‘டிசைன்ஸ் ஆஃப் எ ரெஸ்ட்லெஸ் மைண்ட்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
”என்னுடைய வாழ்க்கை சக்கரத்தில் பல தருணங்களை சந்தித்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்ைக பல விதமான உணர்வுகளை எனக்கு அளித்துள்ளது. அத்துடன் பல மறக்க முடியாத அனுபவங்களையும் என் வாழ்க்கை எனக்கு பரிசளித்துள்ளது. நான் சந்தித்த இந்த அனுபவங்களை என்னுடைய எழுத்து மூலமாக எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்கு இப்போதுதான் சரியான தருணம் கிடைத்திருக்கிறது. எனவேதான் ஊசி பிடித்த கையில் பேனாவை பிடித்தேன்…” என்று சிரித்தபடியே பேச ஆரம்பித்தார் ரிட்டு பெரி.
”மக்களுக்கு என்னை தெரியும். என் பெயர், நான் செய்யும் வேலை இவை எல்லாம் அவர்களுக்கு தெரியும். ஆனால், என்னுடைய மறுபக்கம் பலருக்கும் தெரியாது. இந்த நிலைக்கு வர நான் என்னென்ன பிரச்னைகளை சந்தித்தேன் என்பதை அறிய மாட்டார்கள். அதை எல்லாம் புத்தகமாக எழுதியிருக்கேன். இதன் வழியாக என்னை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இது என்னுடைய கதை மட்டுமல்ல… இந்திய ஃபேஷன் துறையின் வரலாறும் கூட…” என்று சொல்லும் ரிட்டு பெரி, தன்னுடைய புத்தகத்தில் இதுவரை தனது எந்த நேர்காணலிலும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை எழுதியிருக்கிறார்.
”நான் எதிர்கொண்ட ஒவ்வொரு அனுபவமும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. நான் வடிவமைத்த ஒவ்வொரு உடையும் என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிப்பவைதான். அதாவது, என் வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தை உடை அமைப்பில் பிரதிபலித்திருக்கிறேன்.இந்தியாவிலும், பாரீசிலும் ஒவ்வொரு வருடமும் ஃபேஷன் ஷோ நடக்கும்போது புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதுதான் என்னை ஒரு டிசைனராக மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனுஷியாகவும் வளர்த்தது.
எனது இரு புத்தகங்களும் சமகால ஃபேஷன் உலகம் பற்றி விவரிக்கிறது. நான் பார்த்த சித்திரம், அழகான வீட்டுக்குள் நுழையும் போது ஏற்படும் உணர்வு, முதல் முறையாக பாரீஸ் போன போது ஏற்பட்ட உணர்ச்சி… அனைத்தின் வழியாக ஃபேஷன் டிரெண்ட்டை பதிவு செய்திருக்கிறேன்…” என்று சொன்னவருக்கு இந்த புத்தகங்கள் எழுத இரண்டு வருடங்களானதாம்.
”ஃபேஷன் உலகில் புகழ் கிடைக்க கூட நான் அவ்வளவு கஷ்டப்பட்டதில்லை.
ஆனால், இந்த புத்தகங்களை எழுதி முடிப்பதற்குள் திணறி விட்டேன். என்னதான் என்னுடைய சொந்த கதையின் பிரதிபலிப்பு என்றாலும், ஒவ்வொரு முறை பேனாவை எடுத்து எழுதும்போதும் கடந்த காலத்துக்குள் சென்று விடுவேன். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு, எழுதும்போது என்னை தாக்கியது. ஆழ்மனதில் சொற்களும் சம்பவங்களும் முட்டி மோதின. அவற்றை உள்ளது உள்ளபடியே பதிவு செய்ய திணறினேன். என்றாலும் என்னுடைய வேலைப் பளு, குடும்ப கடமைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக எழுதி முடித்தேன். இதற்கு காரணம் தொடக்கம் முதலே வாழ்க்கையில் நான் கடைப்பிடிக்கும் ஒழுங்குதான்.
ஃபேஷன் டிசைனிங்கோ, டயட்டோ, உடற்பயிற்சிகள் செய்வதோ, புத்தகம் எழுதுவதோ… எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நேர்த்தி, ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கடைப்பிடிக்கவும் செய்தேன். இந்த ஒழுங்குதான் எனது வெற்றியின் ரகசியம்…” என்று சொல்லும் ரிட்டு பெரி, புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.”பல மரபுகள் சார்ந்த புத்தகங்களை படிக்க பிடிக்கும். அயன் ரான்ட் எழுதிய ‘த பவுண்டெயின் ஹெட்’ படித்த போது மிகப்பெரிய தாக்கத்துக்கு ஆளானேன். என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் அது. எனக்கென சொந்தப் பாதையை நான் தேர்ந்தெடுக்க அந்த நூலே வழிவகுத்தது. தவிர மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காமல் இருக்கவும் கற்றுக் கொண்டேன்.
‘த சீக்ரெட்’ புத்தகம் மூலம் வாழ்வில் பாசிடிவ் ஆக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். நாம் ஒரு விஷயத்தை உண்மையாக விரும்பினால் நிச்சயம் அதை அடைவோம் என்பதை ‘ஆல்கெமிஸ்ட்’ சொல்லிக் கொடுத்தது. ‘பகவத் கீதை’ நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. முடிந்து போன விஷயத்தை பற்றி வருந்தக்கூடாது. அதே சமயம் எதிர்காலம் எப்படி அமையுமோ என்றும் கவலைப்படக் கூடாது. நிகழ்காலத்தில் என்ன சாதிக்கலாம் என்று யோசிக்க அதுவே கற்றுக் கொடுத்தது.
நான் எந்த ஒரு விஷயத்தை குறித்தும் சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். மனதில்தோன்றுவதை செய்ய பிடிக்கும். அதனால்
என்னுடைய அடுத்த புத்தகத்தை மனம் தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கிறேன். அதற்கான தலைப்பையும் தேர்வு செய்து
விட்டேன். ‘த ஹார்ட் ஆஃப் ஏ ரெஸ்ட்லெஸ் மைண்ட். நன்றாக இருக்கிறதா..?’கண்கள் விரிய கேட்கிறார் ரிட்டு பெரி.