வேனிட்டி பாக்ஸ்
சன் ஸ்கிரீன் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அதன் அவசியம் வரை அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி? அதைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்… வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சன் ஸ்கிரீன் என மேலும் பல தகவல்களை இந்த இதழிலும் தொடர்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.
அதிக எஸ்.பி.எஃப். அதிக பாதுகாப்பைத் தருமா?எஸ்.பி.எஃப். 15 – எஸ்.பி.எஃப். 30 – இவற்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?
எஸ்.பி.எஃப் 30 உள்ளதுதானே இரண்டு மடங்கு அதிக பாதுகாப்பைத் தரும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படியில்லை. எஸ்.பி.எஃப். 15 உள்ளது யுவிபி கதிர்களை 93 சதவிகிதமும், எஸ்.பி.எஃப். 30 உள்ளது 97 சதவிகிதமும் வடிகட்டும் என்பதே உண்மை.
சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமா?
சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்தில் இருந்து முழுப் பாதுகாப்பையும் தந்துவிடும் என நினைக்க வேண்டாம். எவ்வளவு எஸ்.பி.எஃப் உள்ளதாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் எத்தனை பட்டையாக சருமத்தில் தடவிக் கொண்டாலும் சரி, சன் ஸ்கிரீனை மட்டுமே நம்பி, நீண்ட நேரம் வெயிலில் நிற்பது சருமத்தை நிச்சயம் பாதிக்கும். எனவே, சன் ஸ்கிரீன் உபயோகித்தாலும், வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நிழலில் இருக்க முயற்சிக்க வேண்டும்.
கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கூடியவரையில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அகலமான விளிம்புகள் வைத்த தொப்பியைப் பயன்படுத்தலாம். காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளை அணிய வேண்டும். மேக்கப் அணிகிற பெண்கள் முதலில் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு அதற்கு மேல் மேக்கப் போட்டுக் கொள்ளலாம்.
சன் ஸ்கிரீன் உபயோகிப்பதில் கஞ்சத்தனம் காட்டாமல், கழுத்து, காதுகள், கைகள் என வெயில் படும் இடங்களில் எல்லாம் தாராளமாக தடவிக் கொள்ள வேண்டும்.
உங்கள் உதடுகளும் வெயில் பட்டு கருத்துப் போகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே உதடுகளைப் பாதுகாக்க யுவி பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தடவிக் கொண்டு அப்படியே விடாமல் மீண்டும் டச்சப் செய்ய வேண்டும்.
நீங்கள் பயன்படுத்துகிற சன் ஸ்கிரீன் எத்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் கவலையில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை பழைய சன் ஸ்கிரீனை நீக்கிவிட்டு புதிதாகத் தடவிக் கொள்ள வேண்டும். வியர்வை அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி சன் ஸ்கிரீன் தடவ வேண்டியது மிக அவசியம்.
எக்ஸ்பையரி தேதி பார்த்தே சன் ஸ்கிரீனை உபயோகிக்கவும். காலாவதி காலத்துக்குப் பிறகு சன் ஸ்கிரீனில் ஆற்றல் இருக்காது.
சன் ஸ்கிரீன் என்பது வெறும் வெயில் நாட்களுக்கானது மட்டுமல்ல… வெயிலே இல்லாத நாட்களிலும் சன் ஸ்கிரீன் அவசியம். அவ்வளவு ஏன்..?
குளிர் காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாட்களிலும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். காருக்குள் பயணம் செய்தாலும் சரி, வெயில் நாட்களில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சரி… சன் ஸ்கிரீன் தடவிக் கொள்வது பாதுகாப்பானது.
தண்ணீருக்குள்ளும் தேவை…
நீச்சல் பயிற்சி செய்கிறவர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாகவும், நேரடியாக அடிக்கிற வெயிலின் காரணமாகவும் சருமம் வேகமாகக் கருக்கும். எனவே அவர்களுக்கும் சன் ஸ்கிரீன் தேவை. தண்ணீரில் பட்டாலும் கரையாத வாட்டர் ரெசிஸ்டென்ட் சன் ஸ்கிரீன் இவர்களுக்கு பாதுகாப்பைத் தரும். ஆனால், அவற்றின் வீரியம் அதிகபட்சமாக 40 முதல் 80 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்பதையும் அதற்கு மேல் தண்ணீரில் இருப்பவர்கள் மீண்டும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுங்கள்…
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை வைத்து சன் ஸ்கிரீனை தேர்வு செய்யாதீர்கள். மற்றவர்களுக்குப் பொருந்திப் போவது உங்களுக்கும் அப்படியே இருக்கும் என் அர்த்தமில்லை. எனவே, சரும மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் உங்கள் சருமத்தின் தன்மையைக் காட்டி, அதன் தேவைக்கேற்ற சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?
குழந்தைகளின் சருமம் மிக மென்மை யானது என்பதால், பெரியவர்கள் உபயோகிக்கிற சன் ஸ்கிரீனையே அவர்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. Para-Amino Benzoic Acid (PABA) மற்றும் dioxybenzobe,oxybenzone sulisobenzobe போன்ற கெமிக்கல்கள் அடங்கியவற்றை குழந்தை களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சன் ஸ்கிரீன்…
அவகடோ ஆயில் 3 டேபிள்ஸ்பூன்
ஆல்மண்ட் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
ஜோஜோபா ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
வைட்டமின் ஈ ஆயில் 5 துளிகள்
ஷியா பட்டர் 1 டேபிள்ஸ்பூன்
கோகோ பட்டர் 2 டேபிள்ஸ்பூன்
பீஸ் வேக்ஸ் 1 டேபிள்ஸ்பூன்
சோயா லெசிதின் 1 டேபிள்ஸ்பூன்
கற்றாழை ஜெல் 2 டேபிள்ஸ்பூன்
போரக்ஸ் பவுடர் அரை டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் சிறிது.
பீஸ் வேக்ஸை துருவவும். அத்துடன் ஷியா பட்டர், கோகோ பட்டர் சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கவும். முழுக்க உருகியதும் கலவையை நன்கு அடிக்கவும். அதில் மற்ற எண்ணெய்களையும் சோயா லெசிதினையும் சேர்க்கவும். ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல் மற்றும் போரக்ஸ் பவுடர் சேர்த்து பிளெண்டர் உதவியால் நன்கு கலக்கவும். சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
உங்களுக்குப் பிடித்தமான வாசனையில் ஏதேனும் ஒரு பாடி லோஷன் – ஒன்றரை கப், clove ஆயில் – 5 துளிகள், பெப்பர்மின்ட் ஆயில் – 8 துளிகள், கற்றாழை ஜெல் – 15 டீஸ்பூன் எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்து, நேரடித் தணலில் காட்டாமல் டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கவும். பிறகு நன்கு நுரைக்க அடித்து காற்றுபுகாத பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் சன்ஸ்கிரீனாக உபயோகிக்கலாம்.