சமையல் எரிவாயு பாதுகாப்பு…
நாளொரு மேனி பொழுதொரு சாவுமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து மரணங்கள் நாடு முழுதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
கியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ். சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
காற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான – சமமான இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.
வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.
நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும்.
பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் “நாப்”பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் “நாப்”களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் “நாப்” எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.
காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.
காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சுயமாக ரிப்பேர் செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை பயன்படுத்துங்கள்.
கியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் “நாப்”களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.
காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும் நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.
கசிவு ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (அலுவலக நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற டெலிபோனில் புகார் தெரிவிக்கலாம். அலுவலக நேரத்திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று எண்ணை நிறுவனம் தெரிவித்துள்ளது.