கல்லீரல் நாம் சாப்பிடும் உணவில் கழிவு நச்சுக்களை வடிகட்டி, சத்தினை ரத்தத்திற்கு அனுப்புகிறது. இதனால் சரியான ஊட்டம் உடல் மொத்தத்திற்கும் கிடைத்து, நமக்கு சக்தியை தருகிறது.
ஆனால் அதிக கொழுப்பு மிக்க உணவுகளை உண்ணும்போது, அல்லது மது அருந்துவதால், தேவைக்கு அதிகமான கொழுப்பு கல்லீரல் செல்களில் தங்கிவிடுகிறது. இதனால் கல்லீரலில் செயல்கள் குறைய நேரிடும். இந்த அதிகப்படியான கொழுப்பு, கல்லீரலில் தங்கி விடுவதைதான் கொழுப்பு கல்லீரல் என்று கூறுவார்கள்.
கொழுப்பு கல்லீரல் உருவாக காரணம் : பொதுவாக 40-60 வயதினருக்கு இந்த கோளாறு அதிகம் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடிப்பழக்கம், கொழுப்பு உணவுகளை உண்ணுவது, உடல் பருமன், சர்க்கரை வியாதி, உடல் எடை குறைதல் ஆகியவைகளும் கல்லீரல் கொழுப்பிற்கு காரணமாகும்
கொழுப்பு கல்லீரல் கோளாறு இரண்டு வகையில் உண்டாகும். ஒன்று மது சாரா கொழுப்பு கல்லீரல்,மற்றொன்று மது சார்ந்த கொழுப்பு கல்லீரல் மது சாரா கொழுப்பு கல்லீரலில், உண்ணும் கொழுப்பு மிக்க உணவுகளினால், கல்லீரலில் கொழுப்பு படியும்.
மது சார்ந்த கொழுப்புக் கல்லீரலில் மது அருந்துவதால், கல்லீரல் பாதிப்படைகிறது. இதனால் கொழுப்புக்களை கல்லீரலால் ஜீரணிக்க முடியாமல் அங்கேயே தங்கி விடுகிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள் : காய்கறிகள் : கொழுப்பு குறைந்த உணவுகளையே கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீர்சத்து அதிகம் உள்ள சுரைக்காய், பூசணிக்காய் ஆகியவை கொழுப்பின் தேவையை ஈடு கொடுக்கும் வகையில் சாப்பிடலாம். விட்டமின் சி நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். கீரை வகைகள் மிக நல்லது.
பழங்கள்: எல்லா வகையான பழங்களில் தினமும் சாப்பிட வேண்டும். இவை கல்லீரலின் செயல்பாட்டினை தூண்டுகின்றன. அதே போல் இன்சுலின் சுரப்பினையும் அதிகரிக்கச் செய்யும்.
பால் வகைகள் : பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தயிரினை தவிர்த்திடுங்கள். மோர் மிகவும் நல்லது. பாலாடை நீக்கிய பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பசும்பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆகவே பசும்பாலினை உபயோகப்படுத்துங்கள்.
முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி, சாப்பிடலாம். மீன், கடல் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஆனால் என்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
லெமன் டீ : வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். அல்லது பால் கலக்காத தேநீர் தயாரித்து, அதில் எலுமிச்சை சாறு தேன் கலந்து குடிக்கலாம்.
வினிகர்+நீர் : வெதுவெதுப்பான ஒரு டம்ளார் நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடித்தால், கல்லீரல் நன்றாக வேலைசெய்யும். கொழுப்புகள் கரையும்.
க்ரீன் டீ : கிரீன் டீ தயாரித்து, அதில் தேன் கலந்து குடித்தால், கல்லீரலில் ஏற்படும் வீக்கங்கள் குறையும். கல்லீரலில் படியும் கொழுபினை க்ரீன் டீ கரைக்கிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள் : மைதா மாவு, அரிசி மாவினால் செய்த உணவுகளை தவிர்த்திடுங்கள். எண்ணெயில் பொரித்த சிப்ஸ் வகைகளை சாப்பிடக் கூடாது. பீஸா, பிஸ்கட் வகைகளையும் தொடக் கூடாது. மைதாவில் செய்த பிரட் , கேக் மற்றும் பேக்கரி உணவுகளை சாப்பிடக் கூடாது.
இவற்றை எல்லாம் சாப்பிட தோன்றியது என்றால் என்றைக்காவது ஒரு நாள் சாப்பிடலாம். ஆனால் தினமும் இந்த கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால், கல்லீரலே செயலிழக்கும். ஆகவே நீங்கள் சாப்பிடும் உணவு முக்கியம்.
நோயற்ற வாழ்வுதான் உயரிய செல்வம். எந்த நோயும் வருமுன் காப்பது உத்தமம். அளவுக்கு அதிகமான கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரலுக்கு கேடுதான் தரும்.
நம் உடலின் மொத்த இயக்கங்களுக்கும் முக்கியமான சக்தியை கொடுப்பது கல்லீரல்தான். அதற்கு எது நல்லதோ அதனை உணர்ந்து கொடுத்திடுங்கள். நம்மை இறுதிவரை நன்றாக இயங்க வைக்கும்.