இன்றைய காலகட்டங்களில் ஜங்க் உணவுகள், மசாலா, கொழுப்பு நிறைந்த உணவுகள் என பார்க்கும் எல்லாவற்றையும் உண்டு மகிழ்கிறோம். கூடவே மது, காலம் தவறிய உணவுப் பழக்கம் இவை எல்லாம் சேர்ந்து வயிற்றில் தொப்பையை உண்டாக்குகிறது.
குழந்தைகளும் இதில் விதி விலக்கல்ல. இப்போது சிறு குழந்தைகளும் உடல் பருமனாகி, எளிதில் நோய்களுக்கு தள்ளப்படுகிறார்கள். சிறிதும் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப் படாமலிருந்தால் இது, பின்னாளில் நிறைய கோளாறுகளை உடலில் உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு, குழந்தை பிறந்ததும் உடல் எடை கூடி விடுகிறது. உடல் எடையை டயட், எக்ஸர்சைஸ் என்று குறைத்தாலும் வயிற்றிலுள்ள தொப்பை மட்டும் குறைவதேயில்லை என்று பெரும்பாலான் பெண்கள் புலம்புவதை பார்க்கலாம்.
இப்படி எல்லா வயதினருக்கும் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்ய ஏற்ற ஒரு எளிய பயிற்சிதான் யோகா. இதனை உலகமே இப்போது கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை. காரணம் அவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளது.
உடலில் ஒவ்வொரு உறுப்பிற்கும், ஒவ்வொரு செல்லிற்கும் நன்மைகளை தரும்.அப்படி தொப்பையை குறைக்கவும் யோகாசனத்தில் ஆசனம் இருக்கிறது.
உத்கடாசனா : உத்கடாசனா என்றால் உட்காரும் நிலை என்று அர்த்தம். நாற்காலியில் அமர்வதைப் போல செய்யும் இந்த ஆசனம், எலும்பு முட்டிகளுக்கு பலம் தருகிறது.
வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் வீம்பாய் தங்கியிருக்கும் விடாபிடியான கொழுப்புகளை இந்த ஆசனம் குறைக்கும். தினமும் தொடர்ந்து செய்யுங்கள். நீங்களே இதன் பலனை புரிந்து கொள்வீர்கள்.இப்போது எப்படி உதக்டாசனா செய்யலாம் என்று பார்ப்போம்.
செய்முறை : முதலில் நேராக நின்று கொள்ளுங்கள். இப்போதும் மெதுவாய் மூச்சை உள்ளே இழுக்கவும். மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை தலைக்கு மேலே செங்குத்தாக நீட்டவும்.
நாற்காலியில் அமர்வது போல் முட்டியை வளைக்கவும். அந்த சமயத்தில் மெதுவாய் மூச்சை விடவும். இப்போது மெதுவாய் சிறிது முதுகினை முன்னோக்கி வளைக்கவும். இதே நிலையில் 30 நொடிகள் நிற்கவும்.
பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.முதலில் மூச்சை இழுத்தபடி, முட்டியை நேராக்க வேண்டும். பின் உடலை நிமிர்த்துங்கள, பின் கைகளை கீழே விட்டபடி மூச்சை விட வேண்டும். இப்போது பழைய நிலைக்கு வந்துவிடலாம்.
ஆரம்பத்தில் செய்யும்போது பேலன்ஸ் பண்ணுவது கஷ்டம். உங்கள் பாதங்களை அழுத்தி,தொடைகளினால் பேலன்ஸ் பண்ணிக் கொண்டால் ஈஸியாகி விடும். தினமும் இந்த பயிற்சியினை செய்யும்போது, சுலபமாகிவிடும்.
பயன்கள் : வயிறு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு குறையும். தொடை எலும்புகள் பலமாகும். கைகள், தோள்பட்டைகள் வலிமையாகும்.
குறிப்பு : உடலில் முதுகு, தொடைகளில் அடிப்பட்டிருந்தால், இந்த ஆசனம் செய்ய வேண்டாம். மற்றபடி எல்லாருக்கும் உகந்த யோகாசனம். தினமும் செய்திடுங்கள். ஸ்லிம்மாகிவிட்ட உங்களிடம் உங்கள் தோழிகள், அதன் ரகசியத்தை கேட்கும்போது, நீங்கள் பெருமையாய் சொல்லிடலாம்.