ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.
எப்படிச் செய்வது?
கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.
விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்
நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.
முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்னைகளும் தீரும்.
தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.
மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.
வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்னை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, கேட்டல், பார்த்தலின் மீது கட்டுப்பாடு வரும். அலைபாயும் மனதைக் கட்டுக்குள்வைக்கும்.
பய உணர்வு நீங்கும். நேர்மறை எண்ணங்கள், மன உறுதி, மன அமைதி ஏற்படும். சிந்தனை சீராகும்.