பெண்களை தாக்கும் கருப்பை கட்டிக்கு சிகிச்சை முறைகள்
கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை.
பெண்களை தாக்கும் கருப்பை கட்டிக்கு சிகிச்சை முறைகள்
கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. இவற்றின் அளவு மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவு வரை வேறுபடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பல கட்டிகள் உண்டாகலாம்.
அறிகுறிகள்:
அதிகப்படியான இரத்தப்போக்கு, அடிக்கடி இரத்தப்போக்கு, மாதவிலக்கின்போது அதிகமான வலி, அடிவயிறு வலி மற்றும் வீக்கம், இளம் வயது பெண்களுக்கு கருத்தரிப்பதில் காலதாமதம் மற்றும் கருச்சிதைவு, மிகப்பெரிய அளவிலான கருப்பை கட்டிகள் சில சமயங்களில் நீர்ப்பை மற்றும் மலக்குடலை அழுத்துவதால் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் வலி மற்றும் சிரமம் ஏற்படலாம்.
சிகிச்சை முறைகள்:
இளம் வயது பெண்களுக்கு இந்த வகை கட்டிகள் ஏற்பட்டால் கருப்பையை முழுமையாக அகற்ற வேண்டியது இல்லை. மையோமைக்டெமி எனும் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கட்டிகளை கருப்பைக்கு எந்தவித சேதமும் இல்லாமல் அகற்றலாம். இதனால் பிற்காலத்தில் கருத்தரிக்க ஏதுவாகிறது. ஆனால் 40 வயதிற்கு மேல் இக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் கருப்பை முழுவதையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது. ஏனென்றால் இவ்வகை கட்டிகள் திரும்ப திரும்ப வளரும் தன்மை கொண்டவை.
சிலருக்கு மிகச்சிறிய அளவிலான கட்டிகள் எந்தவித தொந்தரவுகளையும் கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட கட்டிகளுக்கு வைத்தியம் தேவை இல்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேன் செய்து அவற்றின் வளர்ச்சியை கண்காணித்து கொண்டு வர வேண்டும். அவை மிக அதிகமாக வளர்ந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை அவசியமாகிறது. 45 வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் அவை தானாகவே சுருங்கி மறைந்து விடுகின்றன.
மிகப்பெரிய அளவிலான பைப்ராய்டு கட்டிகளை கூட லேப்ராஸ்கோப் மூலம் மிகச்சிறு சிறு துண்டுகளாக்கி அகற்ற முடியும். இதனால் ஆபரேஷனுக்கு பின்னால் ஏற்படும் வலி இருப்பதில்லை. விரைவில் வீடு திரும்பி 5 தினங்களுக்குள் அன்றாட வேலைகளில் வழக்கம் போல் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.