23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
113
மருத்துவ குறிப்பு

குட்டீஸ் சுட்டீஸ் – அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள் பேரன்டிங் கைடு!!

குட்டீஸ் சுட்டீஸ் – அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்
பேரன்டிங் கைடு

11

“பையன்கிட்ட என்னதான் அன்பா சொன்னாலும் அடிச்சாலும் அடங்கவே மாட்டேங்கிறான். ரொம்பச் சேட்டை செய்றான். கீழே விழுந்து காயம் பட்டுச்சு… இருந்தாலும்  ஓடுறதும் தாவுறதுமா ரொம்ப அட்ட காசம் செய்றான். ஸ்கூல்ல ஒரு இடத்தில உட்கார மாட்டேங்கிறான்; படிப்பே ஏற மாட்டேங்குது…” – பல பெற்றோர்களின் புலம்பல் இது.

போட்டி மிகுந்த உலகில், ப்ரீகேஜியில் இருந்தே நன்றாகப் படித்தால்தான் வெற்றிபெற முடியும் என நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆனால், குழந்தைகளோ சரியாகப் படிக்காமல் விளையாட்டில், சேட்டைத்தனங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, மனஉளைச்சல் வந்துவிடுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சத்தில்,  “படி… படி…” என்றும் “அதைச் செய்யாதே… இதைத் தொடாதே…” என்றும் பெற்றோர் கண்டிப்புக் காட்டுகின்றனர். மறுபுறம், பள்ளியிலும் இதே கெடுபிடி, மிரட்டல். இதனால், குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் வந்து, மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

சினிமா, டி.வி-யைப் பார்த்தும், யாரோ ஒரு நண்பர் யாருக்கோ நடந்ததாகச் சொன்னதைக் கேட்டும், கூகுளிலும் சமூக வலைதளங்களிலும் உள்ள ஆதாரமற்ற தகவல்களைப் படித்தும், டாக்டரிடம் போய் “குழந்தைக்கு சைக்காலஜிக்கலா பிரச்னை இருக்கு டாக்டர்… ஒருவேளை இந்தக் குறைபாடா இருக்குமோ?” எனக் குழந்தைகளை நோயாளியாகவே ஆக்கிவிடும் பெற்றோர்களும் அதிகம். உண்மையில், இவை எல்லாம்  பெற்றோர் அஞ்சும் அளவுக்குத் தீவிரமான குறைபாடுகளா… கற்றலில் குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகள் என்னென்ன… சிகிச்சைகள் என்னென்ன?

12

குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்னைகள்

படிப்பதில் சிரமம் (Learning Difficulty (LD): விளையாட்டு, உணவு என மற்ற விஷயங்களில் கவனம், ஆர்வம் இருக்கும். ஆனால், படிப்பில் மட்டும் கவனம் இருக்காது.

கவனத்திறன் குறைதல் (Attention Deficit): படிக்கப் பிடிக்காது. ஓர் இடத்தில் அமர்ந்து கவனிக்கவே மாட்டார்கள். வகுப்பறையில் எழுந்து நடந்துகொண்டு இருப்பார்கள். போர்டில் எழுதிப்போடுவதைப் பார்த்து, எழுதப் பிடிக்காது. எழுத்துகள் அவர்களுக்கு வேறு மாதிரியாகத் தெரியும்.

அதீத இயக்கம் (Hyperactivity): ஓர் இடத்தில் நிற்காமல் துள்ளிக்கொண்டே இருப்பார்கள். கை, கால் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காது. எதிரில் இருக்கும் பொருட்களைக் கைகளில் எடுப்பது, உடைப்பது, ஆராய்ச்சிசெய்வது போன்ற செயல்களைச் செய்வர்.

டிஸ்லெக்‌ஷியா (Dyslexia): வார்த்தைகளைக் கண்ணாடியால் பார்த்தால் எப்படி இடமிருந்து வலமாகத் தெரியுமோ, அதுபோல, இவர்களுக்கு சில எழுத்துக்கள் தலைகீழாகவோ, இடமிருந்து வலமாகவோ தெரியும். உதாரணத்துக்கு ‘b’ என்கிற எழுத்து ‘d’யாகவும், ‘m’ எழுத்து ‘w’வாகவும் தெரியலாம். இவர்களுக்கு எழுதுவது, படிப்பது பெரும் சிரமமாக இருக்கும். சிலருக்குக் கணக்கைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கலாம்; சில குழந்தைகளுக்கு வாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்; சில குழந்தைகளுக்கு நுணுக்கமான வேலைகளைச் செய்வதில் பிரச்னை ஏற்படலாம்.

கவனஈர்ப்பு (Attention seekers): எந்தச் செயல் செய்தாலும் அதைப் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் காண்பித்து, அதைக் கவனிக்கச் சொல்லி, பதில் எதிர்பார்க்கும் தன்மை.  உதாரணத்துக்கு, ‘குட்மார்னிங்’ சொல்லிய பிறகு, திரும்ப ‘குட்மார்னிங்’ சொல்லவில்லை என்றால், அந்தக் குழந்தை அடுத்த வேலையைச் செய்யாது. தன் மேல் கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்று  நினைப்பர்.

ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder):
படிப்பதே மிகவும் அரிதாக இருக்கும். வீட்டில் சேட்டை செய்து விட்டு பள்ளியில் அமைதியாக இருந்தால், அது ஏ.டி.ஹெச்.டி இல்லை. வீடு, பள்ளி இரண்டிலும் துறுதுறுவென துள்ளிக்கொண்டே இருந்து, படிப்பிலும் கவனம் இல்லாமல் இருப்பதுதான் `ஏ.டி.ஹெச்.டி’ எனப்படும் அதீதப் பரபரப்பு மற்றும் கவனக்குறைபாடு பிரச்னை.

இந்தக் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் நன்றாகவே இருக்கும். நினைவுத்திறனிலும் குறைபாடு இருக்காது. உடல் உறுப்புகளின் செயல்பாடும் இயல்பாக இருக்கும். ஆனால், எதிலும் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள்.

13

பிரச்னைகள் வரக் காரணங்கள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில், தாய்க்கு அயோடின், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு இத்தகையப்  பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, படிப்பதில் சிரமம் ஏற்படலாம். இவர்களுக்கு, கவனத்திறன் குறைவாக இருக்கும். மற்றவர்களிடம் பேசுவது, தன்னுடைய இயல்பில் மாற்றம், ஓர் இடத்தில் நிற்காமல் ஓடுவது போன்ற நடத்தைப் பிரச்னைகள் இருக்கும்.

மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்கள்கூட குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

குளிர்பானங்கள், பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதுகூட, பிறக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள், மகப்பேறு மருத்துவர்களிடம் சென்று ஆலோசனைப் பெறுகின்றனர். முதல் ஐந்து மாதங்களுக்குள் குழந்தையின் எல்லா உள்உறுப்புக்களும் தோன்ற ஆரம்பித்து முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக சோகம், கவலை, கோபம் போன்றவை குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனாலும், குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

14

சிகிச்சைகள் என்னென்ன?

குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பதைத் தவிர்த்து அவர்களிடம் அன்புகாட்ட வேண்டும். மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். என்ன பிரச்னை என்பதை டாக்டர் கண்டறிந்து, மருந்து தேவையா அல்லது கவுன்சலிங் தேவையா என முடிவுசெய்வார். மனப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள், மூளைப் பயிற்சிகள், கவுன்சலிங் போன்றவற்றாலேயே குழந்தைகளை இயல்புநிலைக்கு மாற்ற முடியும். ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளைக் கட்டுப்படுத்தவே முடியாத சமயத்தில் மட்டும் மருத்துவர் அனுமதியுடன் மருந்து கொடுப்பது நல்லது. விரல்களைவைத்துச் செய்யும் மூளைக்கான பயிற்சி, அபாக்கஸ், மாத்தி யோசி (லேட்ரல் திங்க்கிங்), நினைவுத்திறன் பயிற்சி, பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்ற பயிற்சிகளால் குழந்தைகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்தக் குழந்தைகள் ‘வேண்டும்’ என்றே இப்படி செய்யவில்லை என்பதை முதலில் பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இவர்களுக்குத் தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை.

படிக்கச் சிரமப்பட்டு, மதிப்பெண் குறைவாக எடுத்தால், அவர்களிடம் பேசி என்ன பிரச்னை எனக் கண்டுபிடித்து,  படிக்க ஆர்வம் இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும்.

படிக்க, எழுத, கவனிக்க ஆர்வம் இல்லை எனில், அடித்தோ, மிரட்டியோ குழந்தைகளைச் செய்யவைக்கக் கூடாது. மனநல மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காண்பிக்கலாம்.

இதுதான் பெஸ்ட் ஸ்கூல் என்று குழந்தைக்குப் பிடிக்காத சூழலில் படிக்கவைக்கக் கூடாது.

பொருட்களை எடுப்பதில் சிரமம், ஒவ்வொரு வயதுக்குண்டான இயல்பான வளர்ச்சி இல்லாத குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

மற்ற குழந்தைளோடு ஒப்பிடும்போது நடத்தையில் மாற்றம், இயல்பான விஷயங்களில்கூட மாற்றம் இருப்பதாகத்  தெரிந்தால், உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

15

குறைபாடுகளைத் தவிர்க்க!

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னைகளுக்கு கர்ப்ப காலத்தில் தாய் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுக்காததே பெரும்பாலும் காரணமாக உள்ளது. எனவே, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டை, மீன், ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த உணவுகள், கேரட், பீன்ஸ், அனைத்து வகையான கீரைகள் சாப்பிட் டால், பிறக்கும் குழந்தைக்குக் குறைபாடுகள் வராது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மன உளைச்சலைத் தவிர்த்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

யோகா, தியானம் செய்யலாம். மிதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி செய்வது பெஸ்ட்.

நான்காவது மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையிடம், ‘அம்மா பிரஷ் பண்ணப்போறேன்’, ‘அம்மா சாப்பிடப்போறேன்’, போன்ற எல்லா செயல்களையும் பேசிக்கொண்டே செய்தால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும். நியூரான்கள் நன்றாக வளர்ச்சியடையும். ஐ.க்யூ அதிகரிக்கும்.

வயிற்றில் உள்ள குழந்தையைத் தடவிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த ‘டச் தெரப்பி’ வயிற்றில் உள்ள குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும்.

பெரும்பாலும், ஏ.டி.ஹெச்.டி, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றன.

30 வயதுக்கு மேல் பெண்ணும், 40 வயதுக்கு மேல் ஆணும் குழந்தை பெற்றுக்கொள்வதால், சில குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பெறாமல் தள்ளிப்போட்டால் 18 சதவிகிதம், படிப்பதில் சிரமம் பிரச்னை வரும். திருமணமாகி மூன்று வருடத்துக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

சமச்சீரான உணவு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, சீரான தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை, மிதமான உடற்பயிற்சிகள் செய்தாலே குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
இடது மூளை என்ன செய்யும்?

குழந்தைகள் பள்ளியில், இடது பக்க மூளையைத்தான் அதிகம் பயன்படுத்துவர். லாஜிக்கல் திங்க்கிங், மேத்தமேட்டிக்கல் திங்க்கிங், படித்ததை நினைவில் நிறுத்துதல் போன்றவற்றுக்காக இடது பக்க மூளையைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும்.

16

வலது மூளை என்ன செய்யும்?

வலது பக்க மூளையையும் தூண்டச் செய்தால் படைப்பாற்றல் திறன், கற்பனைத் திறன், புதிய கண்டுபிடிப்புகள், நிறங்கள், படங்கள் போன்ற கலை தொடர்பான அறிவும் மேம்படும்.
படிப்பு ஏறாத குழந்தைகள், குறைபாடுள்ள குழந்தைகளா?

சாதனையாளர்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் அல்ல. பெரும்பாலான சாதனையாளர்களுக்கு, வலது பக்க மூளைதான் அதிகமாக வேலை செய்யும். படிப்பில் கவனம் குறைவாக இருந்து, மற்ற திறன்கள் இருக்குமாயின், அந்தக் குழந்தை குறைபாடுடைய குழந்தை இல்லை. மாறாக அது சாதிக்கும் குழந்தை. அதன் சிறப்பு ஆர்வம் எதுவெனக் கண்டறிந்து அதை மேம்படுத்தினால், அந்தத் துறையில் பெரும் சாதனையாளராக மாற வாய்ப்பு உள்ளது. எனவே, இது ஒரு நோய் எனக் கவலைகொள்ளாது, உண்மையை உணர வேன்டும்.

Related posts

உடலுக்குத் தேவை அமில கார பரிசோதனை முறை

nathan

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!!

nathan

தாய்மையைப் போற்ற ஒரு திருநாள்!

nathan

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan

பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் இலகுவான வழிகள்!சூப்பர் டிப்ஸ்

nathan

3 வயதில் குழந்தைகளுக்கான சத்தான டயட் டிப்ஸ்

nathan

எக்ஸிமா ( Eczema ) தோல் பராமரிப்பு.

nathan

காலை நேர தாம்பத்தியம் புத்துணர்ச்சி தரும்

nathan