கோடைகாலத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு பானங்கள் இருந்தாலும் தண்ணீரை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
கோடையில் தண்ணீர் தாராளமாய் குடிங்க
வெயிலின் ராஜ்ஜியம் நடக்கும் காலம் இது. இப்போது இயல்பாகவே ஜில்லென்று ஏதாவது பருகத்தோன்றுவது இயல்பு. அதன் மூலம் தாகத்தை தணிப்பதுடன், உடலையும் குளுமையாக வைத்து கொள்ளலாம்.
ஆனால் இந்த கோடைகாலத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு பானங்கள் இருந்தாலும் தண்ணீரை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் உடனே ஏ.சி அறைக்குள் புகுந்த கொள்கிறார்கள். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏ.சி யில் இருக்கக்கூடாது.
தண்ணீர் ஜூஸ் போன்றவற்றை கடுங்குளிர்ச்சியில் பருகுவதை விட மிதமான குளுமையில் பருகலாம். சுத்தமான தண்ணீர் இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். நீர்ச்சத்துமிக்க பழங்கள் சாப்பிடலாம்.
காபி, டீ போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். அத்தியாவசிய சத்துக்களையும், ஆக்சிஜனையும் செல்களுக்கு எடுத்து செல்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது.
தண்ணீரால் உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. தேவையற்ற கழிவுகளை தண்ணீர் வெளிவேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. எனவே வெயில் காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடைகாலங்களில் குழந்தைகளும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களை நன்றாக தண்ணீர் குடிக்க பழக்க வேண்டும். அவ்வப்போது புத்தம்புதிய பழங்களை பிழந்து சாறாகவும் கொடுக்கலாம்.