இன்றைய தலைமுறையினர் அதிகம் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தி குறைந்து மெலிதாவது தான். இதனைத் தடுப்பதற்காக பலர் ஹேர் சிகிச்சைகளை மேற்கொள்வது, வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும்.
குறிப்பாக முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, முடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்து, முடி உதிர்ந்து மெலிதாவதைத் தடுங்கள்.
புரோட்டீன்
முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால் தான் முடி கொட்டி மெலிதாகும். இந்த புரோட்டீன் முட்டை, பீன்ஸ், நட்ஸ், மீன், சிக்கன் மற்றும் சீஸ் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், இச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வளர்ச்சிக்கு உதவும். இச்சத்து குறைவாக இருந்தால், முடி வலிமையின்றி இருக்கும். இந்த சத்து டூனா, சிக்கன், சால்மன் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.
ஜிங்க்
முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு உடலில் ஜிங்க் குறைபாடும் ஓர் காரணம். ஜிங்க் மயிர் கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். மேலும் ஜிங்க் தலைச்சருமத்தில் எண்ணெய் பசையை சீராக வைத்து, வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். இந்த ஜிங்க் சத்தானது இறைச்சி, பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் தானியங்கள் போன்றவற்றை ஏராளமாக நிறைந்துள்ளது.
காப்பர்
காப்பர் தான் புதிய ஹீமோகுளோபினை உருவாக்கி, தலையில் ஹீமோகுளோபின் மூலம் ஆக்ஸினை வழங்கி, முடியின் வளர்ச்சிக்கு உதவும். இந்த காப்பர் சத்தானது சோயா, எள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியில் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், முடி ஆரோக்கியத்தை இழந்து உதிரும். எனவே உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க, கீரை, சிக்கன், இறைச்சி, முட்டை, மீன், பசலைக்கீரை மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.