இன்றைய உலகத்தில் நோய்களின் எண்ணிக்கை எண்ண முடியாத அளவில் வளர்ந்து நிற்கிறது. நோய்க்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் பெருகிக் கொண்டே போகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் முதுமை மட்டுமே பெரிய நோயாக இருந்தது. ஆனால் இன்றோ குழந்தைகள் பிறந்தது முதல் பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் வந்து சேர்கிறது.
அதில் பல வித நோய்கள் உயிரை பறிக்கும் விதமாக மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது. அப்படி உங்களை மெதுவாக கொல்லும் ஒரு நோய் தான் சர்க்கரை நோய். சரிவர கவனிக்காமல் விட்டு விட்டால் உங்கள் உயிரையே காவு வாங்கிவிடும். ஆம், அது தான் உண்மை.
சர்க்கரை நோய்க்கு முதல் எதிரியே நாம் உண்ணும் உணவு தான். எனவே சில வகை உணவுகளில் கட்டுப்பாடு வேண்டியது அவசியமே. ஆனால் அதையும் தாண்டி கடைப்பிடிக்க வேண்டிய சில வாழ்க்கை வழிமுறைகளும் உள்ளது. அவைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை தடுக்கலாம். அவை என்னவென்று தெரிய ஆவலாக உள்ளதா? வாங்க பார்க்கலாம்.
சீரான உடற்பயிற்சி
சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் பல விதமான ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கவும் பராமரிக்கவும் செய்யலாம். வாதம், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டைப் 2 சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் இதில் அடக்கம். அப்படி செய்யும் போது எச்.டி.எல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற ட்ரைகிளிசரைடுகள் குறையும். இதனால் இரத்த ஓட்டம் சீராக ஓடும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும்.
கொழுப்புகள் நிறைந்த உணவு மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்
ஜங்க் உணவு என்பதில் எந்த ஒரு ஊட்டச்சத்தும் நிறைந்திருக்காது. மேலும் அவைகளில் கலோரிகளும் அதிகம், உடல்நல ஆபத்துக்களும் அதிகம். ஹைட்ரோஜினேட்டட் கொழுப்புகளில் இருந்து தான் ஜங்க் உணவுகளுக்கு நல்ல சுவை கிடைக்கிறது. இந்த கொழுப்புகள் உடல் பருமன், தமனித் தடிப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும். ஜங்க் உணவுகளை உண்ணுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம். அதனால் முடிந்த வரை அவற்றை தவிர்த்திடவும்.
35 வயதிற்கு பிறகு வருடாந்திர முறையில் இரத்த சர்க்கரை மதிப்பிடுதல்
இப்படிச் செய்வதால் ஒவ்வொருவரும் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் எண்ணிக்கையை சோதித்துக் கொள்ளலாம். இதனால் எந்தளவிற்கு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், எந்தளவிற்கு உணவு கட்டுப்பாடு தேவை போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படும். இதனால் உண்ணும் பழக்கத்தின் மீதும் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் ஒருவருக்கு விழிப்புணர்வு உண்டாகும். இதன் விளைவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மன அழுத்த பராமரிப்பு/வாழ்க்கை முறையில் மாற்றம்
இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம் என்பது பலருக்கும் சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு விஷயமாகி விட்டது. பல நோய்கள் உருவாவதற்கு இது ஊக்கியாக விளங்குகிறது, குறிப்பாக சர்க்கரை நோய்க்கு. பெரியவர்களுக்கு மன அழுத்தத்தை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு சீரான முறையில் உடற்பயிற்சியிலும், யோகா பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியான பயணம் மற்றும் சீரற்ற அலுவலக நேரம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் உடலின் இயல்பு செயல்பாட்டை பாதித்து பல நோய்களை உண்டாக்குகிறது. அதில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உங்கள் பாதங்களை தினமும் சோதனை செய்து கொள்ளுங்கள். பாதத்தில் புண் போன்றவை ஏற்பட்டால் அவற்றை சீக்கிரமாக கவனியுங்கள்.