25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld3770
சரும பராமரிப்பு

சன் ஸ்க்ரீன் அவசியமா?

சருமம் காப்போம்

சரும நல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மருத்துவர் ரெனிட்டா ராஜன்

சருமப் பராமரிப்பில் இந்த அடிப்படையான விஷயம் கூட மக்களுக்குத் தெரிவதில்லையே என்று நீங்கள் ஆதங்கப்படும் ஒரு விஷயம்?

தலைக்குத் தேங்காய் எண்ணெய் நிறைய தேய்த்துக் கொண்டால் பொடுகு போய்விடும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதிக எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் பருக்கள்தான் அதிகமாகுமே தவிர, பொடுகு குறையாது. உடல் சூடு தணியும் என்பதற்காகவும் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். இதுவும் தவறான எண்ணம்தான். உடல் சூடுக்கு இளநீர் குடிப்பது போன்ற மாற்று வழிகளைத்தான் செய்ய வேண்டும்.

‘சருமத்தின் நிறம் கருப்பாவது நீரிழிவின் அடையாளம்’ என்பது போல, வேறு நோய்களின் அறிகுறிகள் என்னென்ன?

பாலிசிஸ்டிக் ஓவரிஸ் (PCOD) பிரச்னை இருக்கும் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும், பருக்கள் வரும், முடி உதிரும். இந்த அறிகுறிகளை அடிக்கடி பலரிடம் பார்க்கிறோம். தரமற்ற ஹேர் டை பயன்படுத்தினால் தலையைச் சுற்றியுள்ள இடங்களில் திட்டுத்திட்டாக மங்கு மாதிரி ஏற்படும். புற்றுநோயாளிகளுக்கு சருமத்தில் கொஞ்சம் தாமதமாகத்தான் அறிகுறிகள் தெரியும். உள்ளங்கைப் பகுதி கடினமாக மாறிவிடுவதை வைத்தோ, ஈறுகளில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்தோ கண்டுபிடிக்க முடியும். எனவே, சருமத்தில் ஏற்படுகிற மாற்றங்களை அலட்சியப்படுத்தக்கூடாது.

குளிர்காலம் வருகிறது. என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளை செய்துகொள்ள வேண்டும்?

குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் பயன்படுத்துவது, தண்ணீர் நிறைய குடிப்பது, நல்ல சோப்பை பயன்படுத்துவது போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.

தேமல் வந்தால் பலரும் அதை கண்டுகொள்வதில்லை. அப்படியே விட்டுவிடுவதால் ஏதேனும் பிரச்னைகள் வருமா?

படர் தாமரை, வெண்புள்ளி நோய், அழுக்கால் நிறம் மாறுவது என்று பல பிரச்னைகளையும் தேமல் என்றுதான் சொல்கிறார்கள். அது எந்த வகையாக இருந்தாலும் அலட்சியமாக விட்டுவிடுவது புத்திசாலித்தனமானதல்ல. முதலில் நமக்கு அது சாதாரண தேமல்தானா அல்லது வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது தெரியாது. அதனால், சருமத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவு எடுத்துக் கொள்வதே நல்லது. உதாரணத்துக்கு, படர் தாமரையை கவனிக்காமல் விட்டால் அது மற்றவருக்கும் பரவும்.

‘வைட்டமின் டி’ கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் வெயில் பட வேண்டும்?

‘வைட்டமின் டி’ யை பொறுத்தவரை சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல. 30 நிமிடங்கள் இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள். ஆனால், சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்கும் விவசாயிகள், தொழிலாளிகளுக்குக் கூட போதுமான ‘வைட்டமின் டி’ கிடைப்பதில்லை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும், உடல் முழுவதும் மூடிக் கொண்டு முகம், கை, கால் போன்ற சில இடங்களில்தான் நமக்கு சூரிய ஒளி படுகிறது. இந்த அளவில் நிச்சயம் போதுமான ‘வைட்டமின் டி’யை சருமம் உற்பத்தி செய்யாது.

‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அதற்காக ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதையும் மறக்கக் கூடாது. குறிப்பாக, இந்த நேரத்தில்தான் ‘வைட்டமின் டி’ கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது? எப்படி தவிர்ப்பது?

சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்னை வரலாம். இந்த வறட்சியைத் தடுக்கக் குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் போட்டுக் கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தினால் வியர்க்குரு வரும் வாய்ப்பு உண்டு என்பதையும் மறக்கக் கூடாது.

என்னென்ன சருமப் பிரச்னைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும்?

இது தனி நபரின் உடல் அமைப்பைப் பொறுத்தது. சிலருக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தாலும் அது ஒரு பிரச்னையாக இருக்காது. அழகியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் சின்ன சுருக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைத் தேடி வந்துவிடுவார்கள். முடி கொட்டுகிற பிரச்னைக்குக் கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன் கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.

சன் ஸ்க்ரீன் அவசியமா? எப்போதெல்லாம் சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்?

‘நான் வாழ்நாள் முழுவதும் ஒரு ஸ்கின் டாக்டரை பார்க்க மாட்டேன்’ என்று கொள்கையில் இருக்கிறவர்கள் கூட சன் ஸ்க்ரீனை பயன்படுத்தினால் தப்பித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு சன் ஸ்க்ரீன் அவசியமானது. சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது நிறம் கிடைப்பதற்காகவோ, நிறத்தைத் தக்க வைப்பதற்காகவோ அல்ல. சன் ஸ்க்ரீன் சருமம் சேதமடையாமல் தடுக்கும். சருமம் முதிர்ச்சி அடைவதைத் தள்ளிப் போடும்.

இது உடனடியாக நடந்து விடாது. தினந்தோறும் உடலில் மாற்றம் நடக்கிறது, வயதாகிக் கொண்டிருக்கிறது. அதனால் தினமும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதே நல்லது. இது ஆஸ்திரேலியாவில் நடந்த ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சருமத்தில் பிரச்னை இருக்கிறவர்கள், சிகிச்சையில் இருக்கிறவர்கள் வெளியில் செல்லும்போதுதான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் போதும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்.

தினசரி வாழ்வில் எல்லோராலும் பின்பற்ற முடிகிற சில எளிமையான டிப்ஸ்.

தினமும் மூன்று முறையாவது நன்றாக முகம் கழுவ வேண்டும். இருவேளைகள் குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வரும்போது ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தி முகம் கழுவிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போது மைல்ட் ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம். ஸ்க்ரப் உபயோகப்படுத்துவது சருமத்தை சேதப்படுத்தும். அதனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. கருமையடைந்த இடத்தைத் தேய்ப்பதால் இன்னும் அதிகமாகக் கருமையடையும்.

ஜங்க் உணவுகள், இரண்டு டம்ளருக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒரு முறை தலைக்குக் குளிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலை குளிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து அழுத்தமாகத் தேய்க்கக் கூடாது. மென்மையாக மசாஜ் செய்வதுபோல் தேய்ப்பதுதான் முடிக்கு பாதுகாப்பு!
ld3770
தொகுப்பு: ஜி.ஸ்ரீவித்யா

Related posts

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தின் அழகை அதிகரிக்கும் உணவுகள்!

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

உங்கள் உடல் வலிக்கும் மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கும் பாடி மசாஜ்

nathan

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள்

nathan

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும்

nathan

சருமப் பொலிவுக்கு கைகொடுக்கும் இயற்கையான ஸ்கரப்க

nathan