29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht43932
கர்ப்பிணி பெண்களுக்கு

கருவில் இருப்பது ஆணா பெண்ணா?

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து தெரிவிப்பதும், தெரிந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக நம் நாட்டில் உள்ளது. பாலினம் கண்டறியும் பரிசோதனைகள் பற்றிய விளம்பரங்களை செய்யக் கூடாது என்று இணையதளங்களுக்கும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதில் திடீர் திருப்பமாக, ‘பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனை மீதான தடை நீக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சரான மேனகா காந்தி. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதுதான் இந்த அதிரடியான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும் தவறுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் செய்பவர்களைக் கண்காணிப்பதைவிட ஆக்கப்பூர்வமான மாற்றம் தேவையாக இருக்கிறது. கருக்கொலைக்குத் தப்பித்தாலும் பிறந்த பிறகு சிசுக்கொலைகள் நடக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, கருவிலேயே என்ன குழந்தை என்பதைக் கண்டறிந்து அரசின் பொது ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும், கரு கலைந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்று மேனகா காந்தி கூறியிருக்கிறார்.

இந்த கருத்துக்கு ஒருபுறம் பலத்த வரவேற்பு கிடைத்தாலும், மறுபுறம் கடுமையான எதிர்ப்பும் உருவாகியிருக்கிறது. இதன் எதிரொலியாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறது.’கருக்கொலைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். மாற்றத்தை உருவாக்க விவாதம் தேவை. அதனால் தங்களுடைய கருத்துகளை பொதுமக்கள் அமைச்சகத்துக்குத் தெரிவிக்கலாம்’ என்று கூறியிருக்கிறது.

ஒரு மகப்பேறு மருத்துவராக உங்கள் பார்வை என்ன என்று டாக்டர் பிரேமலதாவிடம் கேட்டோம்.”கருக்கொலைக்கு எதிரான சட்டம் கடுமையாக இருந்தாலும் முழுமையான வெற்றி இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. கருக்கொலைகளும் சிசுக்கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனால், மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருப்பது போன்ற மாற்று சிந்தனை தேவைதான்.

ஸ்கேன் பரிசோதனை என்பது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். மூளை வளர்ச்சியின்மை, இதயக் கோளாறுகள், சிறுநீரகம் வளராமல் இருப்பது, டவுன் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய அரசாங்கமே அனுமதிக்கிறது. குழந்தை வாழ்வது சிரமம் அல்லது பிறந்த உடனே இறந்துவிடும் என்கிற பட்சத்தில் முதல் 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. 12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய 2 மருத்துவர்களின் ஒப்புதல் தேவை.

இந்த ஸ்கேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் சிலர் கருக்கலைப்பு செய்துவிடுகிறார்கள். இதைத் தடுப்பதற்காகவே பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். பிறந்த குழந்தை காரணம் இல்லாமல் இறந்தாலும் சட்டத்தின்படி அவர்களை தண்டிக்கவும் முடியும். மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டில் இந்த சட்டத்தை சாமர்த்தியமாக செயல்படுத்த வேண்டும்” என்கிறார். உசிலம்பட்டி தாலுகாவில் செயல்பட்டு வரும் தன்னார்வலரான தர்மநீதியும் இந்த கருத்தை வரவேற்கிறார்.

”இது வரவேற்கக்கூடிய கருத்துதான். சட்டம் கடுமையாக இருந்தாலும் தவறு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதுவே 2 அல்லது 3 கட்டமாக பரிசோதனை செய்து, ஆவணத்தில் பதிவு செய்யும்போது தவறு செய்கிறவர்களுக்கு மனரீதியாகவே பயம் வந்துவிடும். இத்தனை அபாயங்களைத் தாண்டி எதற்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று மக்களும் நினைப்பார்கள்.

பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கும் மனோபாவம்தான் இந்த கருக்கொலைக்கு முக்கிய காரணம். மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் பெண் குழந்தைகளின் கல்வி, எதிர்காலச் செலவுகளுக்கு பொருளாதார ரீதியான உத்தரவாதத்தை அரசாங்கம் தந்தால் மாற்றம் வரும். சமூக அந்தஸ்தாக ஆண் வாரிசுகளை நினைக்கும் மக்களின் மனநிலையிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.இப்போதே ஓரளவு மக்கள் மாறிவிட்டார்கள். சிசுக்கொலை அதிகமாக நடப்பதாகச் சொல்லப்படுகிற உசிலம்பட்டியிலேயே தவறுகள் குறைந்துவிட்டது.

ஆண்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளாவது, திருமணத்துக்குப் பிறகு பெற்றோரை கவனிக்காமல் போய்விடுவது போன்ற கஷ்டத்தை அனுபவிக்கும் மக்கள், பெண் குழந்தைகள்தான் பாதுகாப்பு என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிறார். இவர்களுக்கு முற்றிலும் மாறாக, ‘இது அர்த்தமற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற கருத்து’ என்று கடுமையாக எதிர்க்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரான தேவநேயன்.

”பெண் குழந்தை என்று ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு கருவைக் கலைத்த அவலம் எல்லாம் நம் ஊரில் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அது ஆபத்துகளுக்குத்தான் வழிவகுக்கும். ஆவணப்படுத்தாமலேயே கலைக்கவும் வாய்ப்பு உண்டு… மருத்துவ உதவி இல்லாமலேயே கருவைக் கலைக்கிற வழிகளையும் மக்கள் கையாளலாம். ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் ஒரு கர்ப்பிணிக்கு மூன்றாவதும் பெண் என்று தெரிந்தால் அந்தப் பெண்ணுக்கு குடும்பத்தாரால் உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ நிச்சயம் தொந்தரவுகள் இருக்கும்.

அதனால் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உடல்நலனை அந்தப் பெண் கெடுத்துக் கொள்வாள். கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகும்.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாலின பாகுபாடற்ற சமூகம் இருக்கிறது. அதனால் அங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கே இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். பாலின பாகுபாடு, பண்பாட்டு ரீதியான பிரச்னைகள் போன்ற அடிப்படை சிக்கல்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் செய்கிறார்கள் என்று மேலோட்டமாக இந்தப் பிரச்னையை அமைச்சர் கையாள நினைப்பதாகவே தெரிகிறது.

பொருளாதார ரீதியாக வளர்ச்சிஅடைந்ததாகக் கூறப்படும் கடலூர் மாவட்டத்திலேயே ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 882 பெண் குழந்தைகள் என்ற மோசமான விகிதாச்சாரம்தான் நிலவுகிறது. பிறகு எப்படி அரியலூர், பெரம்பலூர் போன்ற வறட்சியான மாவட்டங்களிலோ பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலோ விகிதாச்சாரத்தை சமன்படுத்த முடியும்?குடும்பங்களில் ஆணையும் பெண்ணையும் சமமாக மதிக்கிற நிலை, இட ஒதுக்கீட்டில் சமத்துவம் போன்ற அடிப்படையான முன்னெடுப்புகளை கையில் எடுக்க வேண்டும்.

மாறாக இதுபோன்ற பாலின பாகுபாடுகளை உருவாக்கக் கூடாது. மக்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்காமல் எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பத்தையே முழுதாக சார்ந்து இருக்கவும் முடியாது. ‘பிரச்னை செருப்பா? காலா?’ என்று பார்த்துவிட்டு செருப்பின் அளவுக்குத் தகுந்தாற்போல காலை வெட்டினால் போதும் என்று சொல்வது போலவே இந்த கருத்து இருக்கிறது.’இந்த சட்டம் சரியல்ல… வேறு ஏதாவது வழியைப் பார்க்கலாம்’ என்று சாதாரண குடிமகன் சொன்னால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மத்திய அமைச்சரே இப்படி ஒரு முடிவுகட்டுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

ஏற்கெனவே இருக்கிற சட்டத்தின் மூலம் குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்பது யாருடைய தவறு? பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தாலேயே நடைமுறை சிக்கலை களைய முடியவில்லை என்றால் அரசு எந்திரம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம். கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை என்பதற்காக கஞ்சா விற்பதை சட்டப்பூர்வமாக்கிவிட முடியுமா? ஸ்கேன் பரிசோதனை நிலையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எந்த டாக்டரும் தண்டிக்கப்படாமல் அப்புறம் எப்படி இந்த சட்டம் கைகொடுக்கும்? ஏற்கனவே இருக்கும்

சட்டத்தை நடைமுறைப்படுத்தவே போதுமான அதிகாரிகள் இல்லாமல் இருக்கும் நிலையில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொடர்ந்து கண்காணிப்பது சாத்தியமா? ஸ்கேன் பரிசோதனை கட்டாயம் என்ற காரணத்தை வைத்து மருத்துவர்களும் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பிப்பார்களே?” என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்புகிறார் தேவநேயன்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமோ, இல்லையோ…இந்தியாவையே பெண்ணாக உருவகப்
படுத்தி பாரத மாதாவாக வணங்கும் நம் நாட்டில், பெண் இனம் ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்கப்பட்டால் சரிதான்! அபார்ஷனுக்கு பிறகு ஏற்படும் அபாயம் பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களைப் போலவே இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களாலும் கருக்கலைப்புகள் சாதாரணமாக நடக்கின்றன. கருக்கலைப்பின் பின்விளைவுகள் தெரியாமலேயே பலரும் இந்த தவறை செய்கிறார்கள்.

‘ஆனால், கருக்கலைப்பு என்பது கருவில் இருக்கும் குழந்தையை மட்டுமே கொல்கிற சிகிச்சை அல்ல; கர்ப்பிணியின் உயிருக்கே உலை வைக்கும் செயல்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். கருக்கலைப்பைத் தொடர்ந்து சுத்தம் செய்வதினால் ஏற்படும் பிரச்னையில் இருந்து அதிக ரத்த இழப்பு வரை என்ன அபாயம் வேண்டுமானாலும் நேரலாம். நோய்த்தொற்றின் காரணமாக உண்டாகும் Tubal block பிரச்னை, அடுத்த குழந்தை பிறக்கவே வாய்ப்பு இல்லாமலும் செய்துவிடும்.

திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம் காரணமாக நடக்கிற கருக்கலைப்புகளை போலி மருத்துவர்களிடம் செய்துகொள்கிறபோது ஏற்படும் ஆபத்து இதைவிடப் பெரிது. கருக்கலைப்பு என்பது பெண்ணின் உடலோடும், உயிரோடும் விளையாடும் ஆபத்தான சிகிச்சை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக பெண்களுக்கு அந்த விழிப்புணர்வு வேண்டும்.

PNDT சட்டம் – ஒரு பார்வை

அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் பரவலாக ஆரம்பித்த 1990ம் ஆண்டுக்குப் பிறகே கருக்கொலைகள் நடக்க ஆரம்பித்தன. இந்தக் குற்றத்தைத் தடுக்கும் முயற்சியாக Pre-Natal Diagnostic Techniques Act என்ற பாலினத்தைத் தேர்வு செய்வதைத் தடை செய்யும் சட்டம் 1994ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்தின்படி கருவில் இருப்பது பெண் என்பதை ஒரு மருத்துவர் தெரிவித்தால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்; அதே மருத்துவர் மீது மீண்டும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மருத்துவரின் அங்கீகாரமும் பறிக்கப்படும். அதேபோல பாலின பரிசோதனை செய்வதற்காக மருத்துவரையோ, பரிசோதனை நிலையங்களையோ அணுகுகிற பொதுமக்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை உண்டு. இந்த குற்றத்தை மீண்டும் புரிந்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்கிறது சட்டம்.

கருக்கொலை எங்கேனும் நடப்பது தெரிந்தால் 1098 என்ற குழந்தைகளுக்கான ஹெல்ப் லைனிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திலோ புகார் அளிக்கலாம். கருக்கொலைக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்பதால் கிராம நிர்வாக அலுவலர், ஆர்.ஐ, தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் மூலமாகவும் புகார்களை முன்னெடுக்கலாம். ht43932

Related posts

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு…

nathan

மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா?

nathan

பனிக்குடம் உடைதல் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது

nathan

கர்ப்பகாலத்தில் விமானப்பயணம் செய்யலாமா?

nathan

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

nathan

கர்ப்பிணிகள் டீ மற்றும் காபி குடிப்பது நல்லதா?

nathan

தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன?

nathan

சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை

nathan